10 ஆம் வகுப்பு தனித் தேர்வர்கள் கோரிக்கை

பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான தனித் தேர்வு நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவையை சார்ந்த பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கோவையை சார்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் தோல்வி அடைந்தனர். அந்த மாணவர்களுக்கான தனித் தேர்வு நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து தேர்வுகளும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து 10-ஆம் வகுப்பில் தோல்வியடைந்து தேர்வு எழுத தயாராக இருக்கும் தனித் தேர்வர்கள் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சில மாணவர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து தேர்வு நடத்துவது குறித்து தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர். மேலும் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்துள்ளது போல தனித் தேர்வர்களுக்கான தேர்வு நடத்தப்படும் அல்லது நடைபெறாது என்பதை தெளிவாக தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த மாணவர்கள் கேட்டுகொண்டனர்.