பெட்ரோல், டீசல் விலை ஜி.எஸ்.டி கீழ் கொண்டு வரப்படும்

சி.பி. ராதாகிருஷ்ணன்

மாநில முன்னாள் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் வானதிசீனிவாசன், அகில இந்திய இளைஞர் அணித் துணைத்தலைவர் ஏ.பி முருகானந்தம், மாவட்ட தலைவர் ஆர். நந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்ட பிரதமர் மோடியின் ஓர் ஆண்டு கால சாதனை குறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை பா.ஜ.க அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் சி.பி. ராதாகிருஷ்ணன் பேசுகையில், பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்று ஒர் ஆண்டு நிறைவடைந்துள்ளது. மோடி தமிழ் பண்பாட்டின் மீது மிகப்பெரிய மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளார்.

ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக்கல்லூரியை தமிழகத்திற்கு தந்து, மதுரையில் எய்ம்ஸ் என்பது கனவு எனக்கூறிய நிலையில் தற்போது அது நிறைவேறியுள்ளார். ஏழை,எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டு 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.180 ஆக இருந்த கூலி ரூ.200 ஆக உயர்ந்துள்ளது.

காவிரி நீர் விவகாரத்தில் நடுவர் மன்ற தீர்ப்பை மதித்து கர்நாடக அரசு தமிழகத்திற்கு நீர் திறந்துள்ளது.
கிராமப்புற மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க பல கோடி மதிப்பில் குடிநீர் திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.

நாடு முழுவதும் 9.5 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நடைபாதை வியாபாரிகள், விவசாயிகள், வீட்டு வேலை பார்பவர்கள் என பலருக்கும் நலவாரியம் மூலம் ரூ.3 ஆயிரம் ஒய்வூதிய திட்டம் வழங்கியவர் மோடி.

கொரோனா சிறப்பு நிதியாக சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவையில் ஜூன் முதல் வாரத்தில் மட்டும் ரூ.145 கோடி சிறு,குறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகளில் கடன் வழங்கப்பட்டுள்ளது.

ஒர் ஆண்டு காலம் பிரதமர் மோடி மக்கள் நலனில் அக்கறை கொண்டு பொருளாதார ரீதியாக பல முயற்சிகளை மேற்கொண்டு சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஒர் ஆண்டுகளாக விலை ஏற்றமே இல்லை. விரைவில் கோதவரி – காவிரி நதிகளை இணைக்க வேண்டும் என மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி கீழ் கொண்டு வர வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கம்.

மாநில அரசுகளின் ஒப்புதலோடு பெட்ரோல்- டீசல் விலைகள் ஜி.எஸ்.டி கீழ் கொண்டு வரப்படும். கேரளாவோடு மோதல் போக்கை மேற்கொள்ளாமல் பேசி தீர்க்க வேண்டும் என மாநில அரசு எண்ணுகிறது. மின்சாரம் இழப்பு என்பது மின்சாரம் திருட்டு மூலம் நடக்கிறது. இலவச மின்சாரம் திட்டம் ஒரு போதும் ரத்து செய்யப்படாது.

கொரோனா இறப்பு விவகாரத்தில் புள்ளி விவரங்களில் சிறு பிழை இருந்துள்ளது. அதனை தமிழக அரசே ஒப்புக்கொண்டு அதனை சரிசெய்துள்ளது. எதிர்கட்சிகள் அரசு எடுக்கின்ற நல்முயற்சிகளை எதிர்க்கக்கூடாது, ஆளும் அரசின் தவறுகளை சுட்டி காட்டி நல்முயற்சிகளை வரவேற்க வேண்டும்.வழிப்பாட்டு தலங்கள் திறப்பு விவகாரங்களில் தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

தற்போது கொரோனா பரவல் சென்னையில் இருப்பதால் வழிப்பாட்டு தலங்களை திறக்க வேண்டாம் என தமிழக அரசு எண்ணுகிறது. அதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.