இன்னும் 7 நாட்கள்.. மீட்டிங் போடும் சீனா – இந்தியா – ரஷ்யா

இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே வரும் ஜூன் 22ம் தேதி முக்கியமான ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. கொரோனா பாதிப்பு தொடங்கியதில் உலக அரசியலிலும் பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது. அமெரிக்கா – சீனா இடையே சண்டை வர தொடங்கி உள்ளது. இரண்டு நாடுகளும் வர்த்தக ரீதியாக அடித்துக் கொள்ள தொடங்கி உள்ளது. இன்னொரு பக்கம் சீனா – இந்தியா இடையே எல்லையில் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டைகளில் பெரிய அளவில் கருத்து தெரிவிக்காமல் ரஷ்யா அமைதி காத்து இருக்கிறது.

மூன்று நாடுகள்

இந்த நிலையில் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே வரும் ஜூன் 22ம் தேதி முக்கியமான ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இந்த ஆலோசனை நடக்க உள்ளது. ரஷ்யாவின் அழைப்பின் பெயரில் இந்த மீட்டிங் நடக்க உள்ளது. இந்திய – ரஷ்யா – சீனா கூட்டமைப்பு RIC (Russia-India-China) என்று அழைக்கப்படுகிறது.

எதை பற்றி பேசுவார்கள்

இந்த மீட்டிங்கில், என்ன பேச போகிறார்கள் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது தொடர்பாக இப்போதுதான் ஆலோசனை நடந்து வருகிறது. என்ன விஷயங்களை பேசலாம், என்ன விஷயங்களை பேச கூடாது என்று ஆலோசனை செய்ய உள்ளனர். பொதுவாக மூன்று நாடுகளின் பாதுகாப்பு குறித்தும், ஒற்றுமை குறித்தும் இதில் ஆலோசனை செய்ய இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

உறவு எப்படி

முக்கியமாக இந்தியா – சீனா இடையில் எல்லையில் பிரச்சனை நிலவி வருகிறது. லடாக் எல்லையில் இரண்டு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கு இருக்கும் பாங்காங் திசோ பகுதியில்தான் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. அங்கு இருக்கும் 8 கட்டுப்பாட்டு பகுதிகளை யார் கட்டுப்படுத்துவது, யாருக்கு அங்கு உரிமை இருக்கிறது என்பது சண்டையாக உருவெடுத்துள்ளது.

ரஷ்யாவின் அக்கறை

இந்த இரண்டு நாட்டு பிரச்சனையில் ரஷ்யா தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. இரண்டு நாடுகளும் அமைதியாக இருக்க வேண்டும். ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று ரஷ்யா கூறி வருகிறது. அமெரிக்காவிற்கு இடம் கொடுக்க கூடாது என்று ரஷ்யா கூறி வருகிறது. இந்த நிலையில் மூன்று நாட்டு சந்திப்பிற்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது.

7 நாட்கள் முக்கியம்

இன்னும் 7 நாட்களில் இந்த மீட்டிங் நடக்க உள்ளது. இதனால் இது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா கலந்து கொள்ளும் இந்த மீட்டிங்கை அமெரிக்கா கவனமாக உற்றுநோக்க தொடங்கி உள்ளது. இந்தியாவை ஜி7 குழுவில் இணைக்க அமெரிக்கா முயன்று வருகிறது. இதற்கு இந்தியாவும் ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது ஆர்ஐசி மீட்டிங்கில் இந்தியா கலந்து கொள்வது அமெரிக்காவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.