உங்கள் தும்மலை வைத்தே உங்களது குணத்தை சொல்லலாம்!

ஒருவர் தும்மும் முறையை வைத்தே அவர் எந்த மாதிரியான குணம் கொண்டவர் என்பதைக் கணிக்கலாம் என ராபின் கெர்மோட் (Robin Kermode) கூறியுள்ளார். இவர் Zone2.co.uk இன் நிறுவனர்.

அவர் தனது குறிப்பில், தும்மல் பற்றிய தகவலையும் பகிர்ந்துள்ளார். ஒரே ஒரு தும்மல் 100,000 கிருமிகளைக் கொண்டிருக்குமாம். அதுவும் அவை 100 mph வேகத்தில் 27 அடி வரை காற்றில் பரவக் கூடிய ஆற்றல் கொண்டதாம். எனவேதான் தும்மல் வந்தால் கைக்குட்டையையோ அல்லது கைகளை வைத்தோ மூடிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. சரி உங்கள் தும்மல், உங்களைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

தொடர்ந்து தும்முதல் : சிலர் தொடர்ந்து தும்மிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் சுற்றி இருப்போரை கவர நினைப்பவர் என்கிறார். மற்றவர்கள் தன்னை கவனிக்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணம் கொண்டவர்கள் என்கிறார்.

மெதுவாக தும்முதல் : சத்தமே இல்லாமல், அதிக அலப்பறைகள் இல்லாமல் தும்புவோர் நம்பிக்கை குறைவானவர்கள் எனக் கூறுகிறார். அதாவது இவர்கள் வெளிப்படைத் தன்மையில்லாதவர்கள். அனைத்தையும் தனக்குள்ளேயே வைத்துக்கொள்பவர். ஆனால் தன்னுடையக் கருத்தை பதிய வைப்பதில் உறுதியாக இருப்பார்கள் என்கிறார்.

மன்னிப்பு கலந்த தும்மல் : தும்முவதற்கு முன் மற்றும் தும்மிய பின்பும் மன்னிப்பு கேட்பவர்கள் மற்றவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று நினைக்கும் குணம் கொண்டவர்கள். அமைதியான மற்றும் யாருடனும் சட்டென பேசாதவர்களாக இருப்பார்கள். அதேசமயம் அவர்கள் மிகவும் நம்பிக்கைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.

சத்தமாக தும்முதல் : அருகில் இருப்பவர் திடீரென பதட்டப்படும் அளவிற்கு சிலர் தும்புவார்கள். இவர்களைப் பலரும் கடந்திருக்கக் கூடும். இப்படி அதிகமாக ஆண்கள்தான் தும்புவார்கள் என்கிறார் ராபின். இவர்கள் நம்பிக்கை குணம் அதிகம் கொண்டவர்கள். தான் செய்யும் செயல்களில் உறுதியாகவும், தன்னை நினைத்து பெருமை கொள்பவர்களாகவும் இருப்பார்கள் என்கிறார்.

பேச்சுக் கொடுத்து தும்முதல் : இவர்கள் தும்மிய பின்பு அம்மா, அப்பா எனக் கூறுவார்கள். அதேசமயம் சற்று சத்தமாகவும் தும்முவார்கள். இவர்கள் தன் மீது அதிக கவனம் கொண்டவர்கள். கட்டுப்பாடானவர்கள். தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்கள்.

தும்மல் வந்தாலும் தும்ம மாட்டார்கள் : தும்மல் வந்தாலும் அதைக் கட்டுப்படுத்துபவர்கள், மற்றவர்களுக்காக வாழ நினைப்பவர்கள். மற்றவர்களின் சந்தோஷமே முக்கியமாக நினைப்பார்கள். அதேசமயம் மற்றவர்களைக் கவர வேண்டும், ஈர்க்க வேண்டும் என நினைக்க மாட்டார்கள்.

கைக்குட்டை இல்லாமல் தும்முதல் : இதை வீடியோ கால் தும்மல் என்கிறார் ராபின். இவர்கள் வாழ்க்கையில் திட்டங்கள் இல்லாதவர்கள். தயார் நிலையில் இல்லாதவர்கள் எனக் கூறுகிறார். அதேபோல் இவர்கள் குழப்பமான மனநிலை கொண்டவர்கள் என்கிறார்.