உலகின் முன்னணி நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் மற்றுமொரு இந்தியன்

உலகின் முன்னணி நிறுவங்களில் முக்கிய பொறுப்பு வகிக்கும் இந்தியர்கள் பட்டியலில் மற்றொருவர் இணைத்துள்ளார். இவர் தமிழகத்தில் சென்னை சேர்ந்த பிரபாகர் ராகவன்.

பல முன்னணி நிறுவங்களின் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய இவர்  தற்பொழுது கூகுள் நிறுவனத் தேடல் மற்றும் அசிஸ்டன்ட் (Google search and assistant) பிரிவின் தலைவராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

சென்னையைச் சேர்ந்த 59 வயதான இவர், சென்னை ஐஐடியில் கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் முடித்தார். பின்பு, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

இவர் கூகுளில் பணியாற்றும் முன்பு, யாகூ (Yahoo), ஐபிஎம் (IBM) போன்ற மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் இருந்தார்.

2012-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்தார் பிரபாகர். ஆறே வருடங்களில் விளம்பரங்கள் மற்றும் வர்த்தகப் பிரிவின் தலைவரானார். பின்பு கூகுள் ஆப்ஸ், கூகிள் கிளவுட், மற்றும் பயனர் அனுபவங்களை (user interface) மேற்பார்வையிடும் துணைத் தலைவராக (Vice president) பொறுப்பேற்றார்.

இதனையடுத்து கூகுள் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர்களுள் ஒருவராகப் பணியாற்றிய இவர், இனி கூகுள் நிறுவனத் தேடல் மற்றும் அசிஸ்டன்ட் (Google search and assistant) பிரிவின் தலைவராகப் பொறுப்பு வகிப்பார். இதை கூகுள் நிறுவனத் தலைமை அதிகாரி சுந்தர் பிச்சை அறிவித்தார்.

இதற்கு முன்பு பென் கோம்ஸ் என்பவர் கூகுள் தேடல் பிரிவை நிர்வகித்தார். இன்று நாம் கூகுளில் இரண்டு எழுத்துகள் டைப் செய்தாலே நாம் தேடுவது என்னவாக இருக்கும் எனக் கணித்து கீழே பரிந்துரை செய்துவிடும் கூகுள். இந்த Automatic suggestion முறை வந்ததற்கு முக்கியக் காரணம் பென் கோம்ஸ்தான்.

தற்பொழுது பென் கோம்ஸின் பொறுப்பிற்கு பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.