கேபிஆர் கலை கல்லூரியில் அறம் சார்ந்த வாழ்வியல் பயிற்சி வகுப்புகள்

கல்வியாளர்கள் சங்கமம், முதலுலகின் மூத்தகுடி மற்றும் கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கல்லூரியின் சார்பில் “அறம் 2020” என்ற தலைப்பிலான வாழ்வியல் பயிற்சி வகுப்பு காணொளி காட்சி மூலம் ஐந்து நாட்கள் நடைபெற்றது.

ஒவ்வொரு நாள் நிகழ்சியிலும் ஒவ்வொரு பெரும் தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு அறம் குறித்து உரையாற்றினர். இந்நிகழ்வில் முதலுலகின் மூத்தகுடி அமைப்பின் நிறுவனர் அசோக்குமார் வரவேற்புரை ஆற்றினார். இதனை அடுத்து கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கல்லூரியின் முதல்வர் பாலுசாமி தலைமையுரையில், பேசுகையில், அறம் என்பது மனித வாழ்வில் அடிப்படையாக இருக்கவேண்டியது. மனிதன் தன்னுடைய ஒவ்வொரு நிலையிலும் வாழ்வறங்களைக் கடைப்பிடித்தால் ஆங்காங்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம் என்று கூறி தலைமையுரை வழங்கினார்.

முதல் நாள் நிகழ்வில், சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்ட காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் சுப்பையா “மனிதம் போற்றுவோம்” என்னும் தலைப்பில் பேசுகையில், மனிதம் என்பது மனிதனுக்கு அடிப்படையாக இருக்கவேண்டிய ஒன்றாகும். ஆனால் தற்போதைய கொரோனா காலத்தில் மனிதம் தான் உயர்வாக இருக்கக் கூடிய அடிப்படைப் பண்பாக உள்ளது. வாழ்க்கை என்பது மற்றவர்களுக்கு உதவிசெய்வதும் மகிழ்ச்சிப்படுத்துவதும் தான் என்பதை புரிந்து வாழ்வதே மனிதம். இந்த மனிதம் ஆங்காங்கு காணாமல் போவதற்குக்காரணம் சுயநலம் மட்டுமே. சுயநலம் குறைந்தால் மனிதநேயம் குறையும். மனநிறைவு கிடைக்கவேண்டுமென்றால் மனிதத்தோடு நாம் இருக்கவேண்டும் என்பதைத் தன் வாழ்வில் நிகழ்ந்த அனுபவங்களோடு சேர்த்துக் கூறினார். மேலும் எதிர்காலத் தலைமுறையினரிடத்தில் வளரும் மனிதம் என்பது முதுமைக்காலத்தில் உள்ள பழைய தலைமுறையினருக்கு அதிகம் தேவைப்படுகிறது. வரும் எதிர்காலத் தலைமுறையினருக்கு, இயல்பாக உள்ள மனிதத்தை வளர்க்கும் பொறுப்பு பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமுமே உள்ளது என்றும் கூறினார்.

இரண்டாம் நாள் நிகழ்வில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஊடகவியலாளர் மற்றும் உ.வே.சா விருதாளர் ஊடக அறம் என்னும் தலைப்பில் பேசுகையில், மருது அழகுராஜ், மனித குலத்திலிருந்து நசிந்து கொண்டிருக்கும் சொல்லாக அறம் என்பது உள்ளது. ஊடகம் என்பது உண்மையைச் சொல்வதாக மட்டுமல்லாமல் உகந்தததைச் சொல்லக்கூடியதாகவும் இருக்கவேண்டும். ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன்பு ஊடகத்தில் அறம் மேலோங்கி இருந்தது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஊடகம் என்பது தேவைகளைப் பொறுத்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. காந்தி, பெரியார் போன்ற பெரும்பாலான தலைவர்களும் சான்றோர்களும் பத்திரிக்கை போன்ற ஊடகங்களோடு நெருங்கிய தொடர்புடையவர்களாக இருந்தனர். அதனால் அவர்களது சிந்தனையும் செயல்பாடும் மக்கள் சார்ந்தும், மக்கள் நலம் சார்ந்தும் சிறப்பாக இருந்தது என்று பல நிகழ்வுகளைத் தன் வாழ்வனுபவங்களோடு இணைத்துக் கூறினார். மேலும் ஊடக அறம் சிறப்பாக இருக்கவேண்டுமென்றால் வாசிப்புத்தன்மையும் அறம் மிக்கதாக இருக்கவேண்டும் என்றும் கூறினார்.

மூன்றாம் நாள் நிகழ்வில், சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்ட மதுரை தியாகராஜா கல்லூரியின் தகைசால் பேராசிரியர் ஞானசம்பந்தம் தமிழுக்கு அறம் என்று பெயர் என்னும் தலைப்பில் பேசுகையில், அறத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று தர்மம். இரண்டாவது அறம் பாடுதல். இந்த இரண்டாவது வகையில் தான் பெரும்பாலான மனிதர்கள் தற்போது வாழ்ந்து வருகிறார்கள். இலக்கியங்களில் ஆசிரியர்கள் தனது பாடல்களில் தன் பெயர்களைக் குறிப்பிடமாட்டார்கள். முதன்முதலில் திருஞானசம்பந்தர் தான், தன் பாடலின் கடைசி வரையில் தன்னுடைய பெயரைக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்மொழி பக்தி மொழியாகவும் நீதியைச் சொல்லும் மொழியாகவும் உள்ளது. மனிதனின் மனிதத்தன்மையற்ற போக்கைக் கண்டு, மனிதன் தன்னைத்தானே பார்த்து அஞ்சுகிறான். மனிதனை மனிதனாக்கத் தோன்றியதே இலக்கியங்கள். ஆகவே இளமை, முதுமை, வாழ்க்கை, பக்தி, போர், காதல், கணவன், மனைவி போன்ற அனைத்து நிலைகளிலும் அறங்கள் சொல்லப்பட்டுள்ளன. அறம் உத்வேகத்தைக் கொடுக்கும். அறம் உயர்வைக் கொடுக்கும். மனிதன் மனிதனாக வேண்டும். மனிதன் தெய்வமாக வேண்டும். மனிதன் மற்றவர்களுக்கு உதவ வேண்டும். இவை அனைத்திற்கும் அடிப்படையாக உள்ளது அறமாகும். பறித்துத்தின்பவனாகத் தோன்றிய மனிதனை, கொடுத்துதவும் மனிதனாக வளர்த்தது அறம் தான் என்று கூறினார். மேலும் தமிழையும் வாழ்வியலையும் இணைத்து சங்ககாலத்திலிருந்து தற்போது வரை உள்ள அனைத்து அறங்களையும் எடுத்துக்கூறினார்.

நான்காம் நாள் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்ட அறிவியல் அறிஞர், மங்கள்யான் திட்ட இயக்குநர்  மயில்சாமி அண்ணாத்துரை மனித வாழ்வில் அறிவியல் என்னும் தலைப்பில் பேசுகையில், இயல், இசை, நாடகம் என்பதோடு சேர்ந்து நான்காவதாக அறிவியல் தமிழ் வரவேண்டும். அப்போது தான் தமிழன் தலைநிமிர முடியும். விலங்கிலிருந்து மனிதனை முழுவதும் வேறுபடுத்துவது அறிவியலாகும். ஆகவே அறிவியல் சார்ந்த மனப்பான்மை கல்வியில் வேண்டும். அதுவே கல்வியில் அறிவியலின் நிலை உயர வழி செய்யும். ஆழ்துளைக்கிணற்றை மூடுவதற்கும் சாக்கடைக் கழிவுகளை அகற்றுவதற்கும் அறிவியல் கருவிகள் உள்ளன. ஆனால் அவற்றை நாம் சரியான முறையில் பயன்படுத்துவது இல்லை. அறிவியல் தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்தி சாயப்பட்டறைக் கழிவு மேலாண்மை மற்றும் பசுமை ஆலைக்கழிவு மேலாண்மை ஆகியவற்றைச் சரிசெய்ய முடியும். விவசாயத்திலும் அறிவியலின் நிலை உயர வேண்டும். புதுப்புது கண்டுபிடிப்புகள் விவசாயத்தில் வரும்போது விவசாயம் மேலும் வளமைப்படும். விண்வெளியில் அறிவியலின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வகிக்கிறது என்று கூறினார். சமுதாயத்திற்கு செயற்கைக்கோளால் ஏற்படும் பலன்கள் பற்றியும் விண்வெளியில் செயற்கைக்கோளின் செயல்பாடுகள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். சிந்தனை மாற்றம் சிறந்த படிப்பினையைத் தரும். அறிவியலில் குழந்தைத்தனமான பார்வை வேண்டும். அப்போது தான் அறிவியல் அறிவு விருத்தியாகும். சமுதாயத்தால் அறிவியலும், அறிவியலால் சமுதாயமும் வளரவேண்டும். அறம் சாராத செயல்கள் அறிவியலை வெற்றியாக்காது. விரும்பியது கிடைத்தால் மட்டுமே வெற்றி என நினைக்காமல் கிடைத்ததை விரும்பியதாக்குவதே உண்மையான வெற்றியாகும் என்றும் கூறினார். மேலும் இயக்கம் தான் இயற்கையான நிலையாக உள்ளது. அகன்ற பார்வையில் அனைத்துப் பிரச்சினைகளும் சுருங்கிவிடும் என்று கூறி அனைவரையும் ஊக்கப்படுத்தினார்.

ஐந்தாம் நாள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கல்வியாளர்கள் சங்கமத்தின் நிறுவனர் சிகரம் சதீஸ்குமார் உங்களால் மட்டுமே முடியும் என்ற தலைப்பில் பேசுகையில், ஒழுக்கம் என்பது தொடர்ந்த பழக்கம் ஆகும். எனவே நல்ல பழக்கங்களை நாளும் தொடர வேண்டும். நாம் முதலில் நம்மை நேசிக்கவேண்டும். அப்போதுதான் நாம் செய்யும் செயல்கள் நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மகிழ்வான நிலையில் நாம் செய்யும் அனைத்து செயல்களும் வெற்றிபெறும். உலகின் ஆகச்சிறந்த கொடையாளன் விவசாயி ஆவான். விவசாயத்தின் முக்கியத்துவத்தை தற்போதைய தலைமுறைகள் அறிவதில்லை. ஆகவே அடுத்த தலைமுறைக்கு விவசாயத்தின் முக்கியத்தையும் விவசாயியின் நிலையையும் எடுத்துக்கூறவேண்டும் என்றார். சச்சின், சகாயம் போன்றோரின் வாழ்க்கை நிகழ்வுகளைக் கூறி தன்னம்பிக்கை ஊட்டினார். நம்மால் முடியும் என்ற இலக்கோடு நமக்கான வேலையை மன மகிழ்வோடு செய்தால் கண்டிப்பாக அனைத்தையும் வெற்றியாக்கலாம் என்றும் நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கையே நம்மை மேலும் வழிப்படுத்தும் என்றும் கூறினார்.

ஒவ்வொரு நாள் நிகழ்விலும் முறையே மேலாண்மையியல் துறை இணைப்பேராசிரியர் ஹேமலதா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் செந்தமிழ்ச்செல்வி, கணிதவியல் துறை உதவிப்பேராசிரியர் ஜெகதீஸ்வரி, கணினி அறிவியல் உதவிப்பேராசிரியர் பத்மபிரியா, வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் சாந்தி ஆகியோர் ஒவ்வொரு நாளும் ஒருவர் என்ற முறையில் நன்றியுரை வழங்கினர்.

இந்த வாழ்வியல் பயிற்சி வகுப்பில் ஒவ்வொரு நாளும் சுமார் 300 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டடனர்.