தியாகி குமரன் மார்க்கெட் கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி

கோவை மத்திய மண்டலத்திற்குட்பட்ட தியாகி குமரன் மார்க்கெட் கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் மார்க்கெட் கடை உரிமையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டத்தில் இவர் தெரிவிக்கையில், தியாகி குமரன் மார்க்கெட் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றாகும். இப்பகுதியில் உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கட்டாயம் போதிய சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும்.

மார்க்கெட்டிற்கு வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். வியாபாரிகள் கிருமிநாசினி கொண்டு கைகளை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது கடைக்கு வரும் பொதுமக்களை போதிய சமூக இடைவெளியினை கடைபிடிக்க அறிவுறுத்த வேண்டும்.

மேலும், மாநகராட்சியால் வழங்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றாமல் செயல்படும் கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.