மாநில எல்லைகளில் தேங்கி நிற்கும் தேன்!

கொரோனாவின் தாக்கத்தால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் தேனீ வளர்ப்பு தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வாரம் ஒருமுறை தேன் கூடுகளை பராமரிக்க தவறினால் கூடு அமைந்திருக்கும் மரக்கட்டை அரித்து விழுந்துவிடும்.

தேனை எடுக்கவில்லை என்றால் கூட்டின் உள்ளே உள்ள தேனை சாப்பிடுவதற்காக எறும்புகள் சென்றுவிடும். அதனால், தேனீக்கள் கூட்டைவிட்டு வெளியேறி பறந்து சென்றுவிடும். உரிய நேரத்துக்குள் கூடுகளில் இருந்து தேனை எடுக்காமல் இருந்தால் தேன், தேன் கூடு மற்றும் தேனீக்களையும் இழக்கும் நிலை ஏற்படும்.

எல்லை பகுதிகளில் தேன் கூடுகளை சரியாக பராமரிக்க முடியாமலும், எடுத்த தேனை ஊருக்குள் கொண்டு வர முடியாமலும் தவிக்கின்றனர். கேரளா, கர்நாடக எல்லைகளில் அதிகப்படியான தேன் விவசாயிகள் இதில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தேன் விவசாயிகள், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தேன் உற்பத்தி செய்துவருகின்றனர். அம்மாநிலங்களில் வைக்கப்பட்டுள்ள மரக் கூடுகளைப் பராமரிக்க முடியாமலும், உற்பத்தி செய்த தேனை ஊருக்குக் கொண்டுவர முடியாமலும் தவிக்கிறார்கள்.

ஊரடங்குக்கு முன்பே ஊருக்கு வந்தவர்கள் மீண்டும் அங்கு செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். உரிய நேரத்துக்குள் கூடுகளில் இருந்து தேனை எடுக்காமல் இருந்தால் தேன், தேன் கூடு மற்றும் தேனீக்களையும் இழக்கும் நிலை ஏற்படும் என தேன் விவசாயிகள் அஞ்சுகிறார்கள்.

“கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தேன் விவசாயிகள், 95 சதவிகிதம் பேர் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தேன் உற்பத்தி செய்து வருகின்றனர். வழக்கமாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் தேன் சேகரிக்கவும் அடுத்த ஒன்பது மாதங்கள் வரை தேனீக்களைப் பராமரிக்கவும் செய்வார்கள்.

கடந்த சில மாதங்களில் தேன் எடுக்காததால் கூட்டுக்குள் தேன் இருக்கின்றன. தேன் இடத்தை அடைத்துக்கொண்டு இருப்பதால், மாலையில் வரும் தேனீக்களுக்கு கூட்டுக்குள் இருக்க இடப் பற்றாக்குறை ஏற்படும். இதனால் வெளியே இருக்கும் தேனீக்கள், இரவு நேரத்திக் லைட் வெளிச்சத்தைப் பார்த்து வீடுகளுக்குள் சென்று மக்களை தொந்தரவு செய்யும் நிலை ஏற்படும்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 15,000 தொழிலாளர்கள் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தேன் உற்பத்தி செய்துவருகிறார்கள். கேரள மாநிலத்துக்குச் சென்றுவர தற்போது அனுமதிக்கிறார்கள். அங்கு தங்கி நின்று பணி செய்ய அனுமதி கிடைக்கவில்லை.

அதேசமயம், கர்நாடகாவுக்குச் செல்ல பாஸ் கிடைப்பதில்லை. எனவே, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கு செல்லவும், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்காகவும் அனுமதி தரவேண்டும். அம்மாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள சுமார் மூன்று லட்சம் கிலோ தேனை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு எடுத்து வரவும் அனுமதி பெற்றுதர வேண்டும் என்பது இவர்களது கோரிக்கையாக உள்ளது.

(source content)