பிரத்யேக கொரோனா பரிசோதனை கேபின்

காருண்யா மற்றும் ஈஷா தொண்டு நிறுவனம் சார்பில் காருண்யா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த, நேரடி தொடர்பில்லாமல் கொரோனா பரிசோதனை செய்வதற்கான பிரத்யேக கேபின்  பூலவபட்டி ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

இந்த தீவிர கொரோனா தொற்று நோயை தடுக்க காருண்யா நிகர்நிலைப் பல்கலையின் வேந்தர் பால் தினகரனின் ஆலோசனையின் பேரில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் துறை மாணவ, மாணவிகள், கொரோனா பரிசோதனையை நேரடி தொடர்பில்லாமல் தொற்று மாதிரிகள் எடுப்பதற்கு ஏற்ற வகையில் புறஊதா கதிர்கள் உள்ளடக்கிய ஒரு கேபினை தயாரித்துள்ளனர்.

இக்கேபினில் புறஊதாக் கதிர்கள் செலுத்தப்பட்டு வைரஸ் மற்றும் நுண்ணுயிரிகள் அழிக்கப்படுகின்றன. பின்னர் மாதிரிகள் சேகரிக்கும் சுகாதார அலுவலர்கள் இக்கேபினுக்குள் சென்று, நிலையாக இணைத்துள்ள கையுறையின் மூலம் நோயாளிகளிடம் தொற்று மாதிரிகளை சேகரிக்கலாம். கையுறையை மட்டும் வெளியிலிருந்து கிருமி நாசினி கொண்டு சுத்திகரிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

கேபின் முழுவதும் மூடி இருப்பதாலும், புறஊதா கதிர்கள் மூலம் நுண்ணுயிரிகள் அழிக்கப்படுவதாலும், ஊழியர்கள் பாதுகாப்பாக நேரடி தொற்று தாக்குதலிருந்து பாதுகாக்கும் விதமாக இதனை உருவாக்கியுள்ளனர். இந்நிலையில் இந்த கேபினை, பூலுவப்பட்டி ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு, காருண்யா மற்றும் ஈஷா தொண்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. இதனை ஈஷா தொண்டு நிறுவன இயக்குனர் டாக்டர் சாமுவேல் தாமஸ் வழங்க, வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் கனகராணி பெற்றுக் கொண்டார்.

அரசு மருத்துவர் பாலாஜி, சுகாதாரக் கண்காணிப்பாளர் செல்வராஜ், காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஜெயசீலன், லாரன்ஸ் மற்றும் ஜெபசிங் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் தானியங்கி கிருமிநாசினி தெளிக்கும் கருவியையும் வழங்கினர். இக்கருவியை தயாரித்த பேராசிரியர்களையும், ஆய்வக உதவியாளர்களையும் காருண்யா நிகர்நிலை பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் பால் தினகரன், துணைவேந்தர் மன்னர் ஜவஹர், பதிவாளர் எலைஜா பிளசிங் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.