இ-பாஸ் இல்லாத விமானப் பயணிகளுக்கு தடை

கோவைக்கு விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இ-பாஸ் இல்லாத பயணிகள் மீண்டும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 25ஆம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக கோவைக்கு நேற்று 3வது நாளாக விமானங்கள் இயக்கப்பட்டன. முதற்கட்டமாக தற்போது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னையில் இருந்து கோவைக்கு வரும் விமானங்களில் தினமும் நூற்றுக்கணக்கான பயணிகள் வருகிறார்கள்.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் பேசுகையில், ஆன்லைனில் இ-பாஸ் பெறுவதில் விமானப் பயணிகளுக்கு எந்த சிரமும் இருக்காது. சாலை வழியாக செல்பவர்கள் விண்ணப்பித்தால் தான் பலருக்கு கிடைக்காது. ஆனால், விமானங்களில் பயணம் செய்பவர்கள் விமான டிக்கெட்டுடன் அந்த மாவட்ட நிர்வாகத்திற்கு விண்ணப்பித்தால் உடனே கிடைக்கும்.

ஆனால் இ-பாஸ் இல்லாமல் டெல்லியில் இருந்து வந்த நான்கு பயணிகள் அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்பட்டனர். இ-பாஸ் என்பது ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு அல்லது மற்றொரு மாநிலத்திற்கு செல்வதற்கான அனுமதி சீட்டு ஆகும். விமான டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே புக்கிங் ஏஜென்ட்கள்  இ-பாஸ் வேண்டும் என்று கூறி விடுவார்கள். எனவே பெரும்பாலான பயணிகள் இ-பாஸ் உடன் பயணம் மேற்கொள்கின்றனர். இ-பாஸ் இல்லாத பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை, அவர்கள் திருப்பி அனுப்ப படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.