விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்

கோவை மாவட்டத்தில்‌ 11 மற்றும் 12 வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மூன்று முகாம்களில்‌ நடைபெறுவதாக இருந்தது. தற்போது தமிழக அரசின்‌ வழிகாட்டுதலின்படி கூடுதலாக 8 மதிப்பீட்டு மையங்கள்‌ அமைத்து மொத்தம்‌ 11 மையங்களில்‌ மதிப்பீட்டு பணி நடைபெறுகிறது.

இப்பணியில்‌ 375 முதன்மைத்‌ தேர்வாளர்கள்‌ (Chief Examiner), 375 கூர்ந்தாய்வு அலுவலர்கள்‌ (Scrutiny Officer) 2250 உதவித்‌ தேர்வாளர்கள்‌ (Assistant Examiner) மற்றும்‌ 200 அலுவலகப் பணியாளர்கள்‌ என மொத்தம்‌ 3200 ஆசிரியர்கள்‌ மற்றும்‌ அலுவலகப் பணியாளர்களை கொண்டு அனைத்து கட்டுப்பாடுகளுடன்‌ மதிப்பீட்டு முகாம்களில்‌ பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விடைத்தாள்‌ திருத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர்களை ஒருங்கிணைக்க பேருந்துக்கு தலா ஒருவர்‌ வீதம்‌ 74 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்‌. மதிப்பீட்டு மையங்களில்‌ நோய்‌த்தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம்‌, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்‌ துறை, சுகாதாரத்துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை மூலம்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விடைத்தாள்‌ மதிப்பீட்டு மையங்களில்‌ கொரோனா நோய்‌த்தொற்று தடுப்பு நடவடிக்கையின்‌ பொருட்டு அனைத்து ஆசிரியர்கள்‌ பணியாளர்களுக்கு முகக்கவசங்கள்‌, கிருமிநாசினி மற்றும்‌ கை கழுவும்‌ திரவம்‌ வழங்க முன்னேற்பாடுகள்‌ செய்யப்பட்டுள்ளது. மேலும்,‌ ஆசிரியர்கள்‌ சமூக இடைவெளியை கடைபிடிக்க ஒரு வகுப்பறைக்கு 1 முதன்மைத்‌ தேர்வாளர்‌, 1 கூர்ந்தாய்வு அலுவலர்‌ மற்றும்‌ 6 உதவித்‌ தேர்வாளர்கள்‌ என 8 பேர்‌ கொண்ட ஒரு குழு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.

மதிப்பீட்டு மையங்களில்‌ பாதுகாப்பு முறைகள் மேற்கொள்வதை கண்காணிக்க தலா 6 பேர்‌ கொண்ட குழு அனைத்து மையங்களிலும்‌ அமைக்கப்பட்டுள்ளது. மேலும்‌, அனைத்து விடைத்தாள்‌ மதிப்பீட்டு மையங்களுக்கு தலா 2 காவலர்கள்‌ வீதம்‌ காலை 7.00 மணி முதல்‌ மாலை 7.00 மணி வரை பாதுகாப்பு அளிக்க மாநகரக் காவல்‌ ஆணையாளர்‌ மற்றும்‌ காவல்‌ துறை மாவட்ட கண்காணிப்பாளர்‌ மூலம்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பணிகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியர் தலைமையில்‌, முதன்மைக்கல்வி அலுவலர்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள், வருவாய்‌ துறை அலுவலர்கள்‌ மற்றும்‌ சுகாதாரத்துறை மூலம்‌ தொடர்ந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.