மாற்றுத்திறனாளிகளுக்கு இணைய வழியில் கல்வி

முடக்கக் காலத்தில் கல்வி என்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது. இணையத்தின் வழியாக அதனை சரிசெய்து விட்டனர். சாதாரண மாணவர்களுக்கு இது சரி தான், ஆனால் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இது தீர்வாகுமா என்ற கேள்விக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம் சிறந்த முறையில் பதிலளித்துள்ளது.

பிசிஏ பட்டப்படிப்பு படிக்கும், பேச்சு மற்றும் கேட்கும் திறன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் நடத்தப்படுவதாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மாற்றுத்திறனாளி மைய இயக்குநர் பிரபாவதி தெரிவித்தார்.
கூகுள் மீட் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் ஒவ்வொரு பிரிவினருக்கும் வாரத்துக்கு 2 வகுப்புகள் எடுக்கப்பட்டன. அவர்கள் எந்த அளவு புரிந்து கொண்டனர் என்பதைத் தெரிந்துகொள்ள, குறும்படங்கள் தயாரிக்க மாணவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். இதில் ஒவ்வொரு மாணவர்களும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அவர்களுக்கு அதனைத் தனிப்பட்ட விதத்தில் தீர்க்க வேண்டும்.

ஆஃபிஸ் ஆட்டோமேஷன் மற்றும் அசிஸ்டிவ் தொழில்நுட்ப டிப்ளமோ படிக்கும் பார்வையற்ற மாணவர்களுக்கு ஆடியோ வழிமூலம் தொழில்நுட்ப வகுப்புகள் நடத்தப்பட்டதாக இயக்குநர் பிரபாவதி கூறினார். மேலும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இணையவழி கற்பித்தல் என்பது தாங்கள் சந்தித்தப் பிரச்சினைகளில் மிகப்பெரியது. இணையவழி கற்பித்தல் முறை அவர்களால் ஏற்றுகொள்ள முடியவில்லை. அதனால் அவர்களுக்கு அதிக அளவிலான ஊக்குவிப்பு தேவைப்பட்டது. மாற்றுத்திறனாளி மாணவர்களை பயனுள்ள வகையில் கற்க வைப்பதில், அவர்களின் பெற்றோர்களின் உதவியும் நாடப்பட்டது. காதுகேளாத மாணவர்களுக்குத் தகுந்தபடி, கற்பிக்கும் முறைகள் வகுக்கப்பட வேண்டியிருந்தது. செய்கை மொழி மூலம் அவர்களுக்கு கற்பிக்க வேண்டியிருக்கிறது. கற்கும் திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கு அசைவுகளுடன் கற்பிக்க வேண்டியுள்ளது என்றார்.

ஊரடங்கு காலத்தில் இவர்கள் மனதளவில் தனிமையில் தவிக்கக் கூடாது என்பதற்காக புகைப்படவியல், கலைகள் மற்றும் கைவினைப் பொருள்கள் தயாரிப்பு, நடனம் மற்றும் மாணவர்களுக்கு விருப்பமான பொழுதுபோக்குகளில் ஈடுபட அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர் என பிரபாவதி கூறினார்.

தொலைதூர கிராமங்களில் வசிக்கும், சாதாரண செல்போன்கள் வைத்திருக்கும் மாணவர்களை அணுகுவதில் சிரமங்கள் இருந்தன. அவர்களால் கேட்கவும் முடியாது என்பதால், இணைவழிக் கற்பித்தல் அவர்களுக்கு சாத்தியமில்லை, அத்தகைய மாணவர்களுக்கு பாடங்கள் அச்சிடப்பட்ட வடிவிலும், பிரெய்லி மூலமும் அனுப்பி வைக்கப்படுகின்றன.