கூட்டுக்குடும்பமாக ரம்ஜான் தொழுகை

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவையில் கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்து வரும் இஸ்லாமியர்கள் கூட்டுத்தொழுகை கடமையை நிறைவேற்றினர்.

ரம்ஜான் பண்டிகை என்றாலே கூட்டுத்தொழுகை,  ஏழைகளுக்கு உணவளிப்பது, மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்வது என இஸ்லாமியர்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடுவார்கள். இந்த ஆண்டும் குனியமுத்தூர்,  ஆத்துப்பாலம், பூ மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே கூட்டுத்தொழுகை மூலம் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

கொரோனா அச்சம் காரணமாக வழிப்பாட்டுத் தலங்களில் கூட்டுப்பிராத்தனை செய்யவும் மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை கோட்டைமேடு பாரம்பரிய லேனா குடும்பத்தைச் சேர்ந்த கலில் ஹாஜியார் மற்றும் அவரது குடும்பத்தினர் சுமார் 20க்கும் மேற்பட்டோர் லட்சுமணன் வீதியில் உள்ள வீட்டில் கூட்டுத்தொழுகையில் ஈடுபட்டனர்.

இப்பண்டிகையின் முக்கியமான கடமையான கூட்டுத்தொழுகை இந்த கூட்டுக்குடும்ப முறையால் சாத்தியமானதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதே போல் நகரின் முக்கியப் பகுதியில் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வரும் இஸ்லாமியர்கள் காலை கூட்டுப்பிராத்தனை கடமைகளை நிறைவேற்றி இறைவனுக்கு நன்றி செலுத்தினர். பின்னர் உணவு சமைத்து ஏழை எளிய மக்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு இந்த ஆண்டு உணவளித்து தங்கள் கடமையை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.