பாதுகாப்பான பயணத்திற்கு புதிய முறை

தனிமனித இடைவெளியுடன் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள கோவையில் புதிய முறையை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த வாடகை கார் ஓட்டுநர் அமர்நாத் கையாண்டுள்ளார்.

தமிழகத்தில் பல்வேறு வகையான கடைகள் நிபந்தனைகளுடன் இயங்கி வருகின்றன. இதேபோல் கால் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு புதிய நிபந்தனைகள் அரசால் அறிவிக்கப்பட உள்ளதால் தங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ளவும், பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும் புது முயற்சிகளை கையாளத் துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் கோவை கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த வாடகைக் கார் ஓட்டுநர் அமர்நாத், தனது காரில் வரும் வாடிக்கையாளர்களால் தனக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்கவும், மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கவும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் புதிய கண்டுபிடிப்பைக் கையாண்டுள்ளார்.

மேலும் இவர் கார் இண்டீரியல் பணி மேற்கொள்ளும் பிலால் உதவியுடன் பாதுகாப்பான இடைவெளியைப் பின்பற்ற மைக்கா கவர்கள் காரின் உட்பகுதியில் ஒட்டியுள்ளார்.

இது குறித்து இவர் கூறுகையில், மைக்கா கவர்களைப் பயன்படுத்தி கொரோனா கேபின் கேன்வாஷ்களை கார் இன்டிரியர் பணி மேற்கொள்ளும் நபரைப் பயன்படுத்தித் தயாரித்துள்ளோம். அதேபோல மைக்கா கவர் உதவியுடன் ஒரு தனி கம்பார்ட்மென்டை உருவாக்கி உள்ளோம். இதன்மூலம் வாடிக்கையாளர்கள் அமரும் பகுதி மற்றும் ஓட்டுநருக்கான பகுதி இரண்டும் தனித்தனியாகப் பிரிக்கப்படுகிறது.

இது ஓட்டுநர்களுக்கும், பயணிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும் என நம்புவதாகத் தெரிவித்தார்.