கொரோனாவினால் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

பாகுபலி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இயக்கி வரும் படம் (ஆர்.ஆர்.ஆர்.) என்ற ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’.

தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து சுமார் 400 கோடியில் உருவாகும் இப்படத்தில் பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன், ஆலியா பாட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பலரும் எதிர்பார்க்கும் இந்தப் படமானது ஜூன் மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா வைரஸ் பரவலால் இப்படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இந்தத் தேதியிலும் பட வெளியீட்டுக்கு சாத்தியமில்லை என்பதைப் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. ஊரடங்கு முடிந்து இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன் இப்படத்தின் புதிய தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.