பருவமழை முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

மாநகராட்சி துணை ஆணையாளர் பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தார். மாநகராட்சி ஆணைய‌ர் தெரிவித்ததாவது: கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளையும், கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகளையும் தீவிரமாகத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். சாலைகள் பழுதில்லாமல் பராமரிக்கவும், மழையின் காரணமாக மரங்கள் சாலைகளில் விழுந்தால் உடனடியாக அப்புறப்படுத்தி போக்குவரத்தினை சீர்செய்ய வேண்டிய பணிகளைத் தகுந்த ஆயத்தங்களுடன் மேற்கொள்ள வேண்டும். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அலுவலகங்கள், வணிக வளாகங்கள், வீடுகளில் பராமரிக்கவும், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் கிடைப்பதற்கும் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிப்புடன் பணி மேற்கொள்ள வேண்டும். சுகாதாரப் பணியாளர்கள் நோய் தடுப்பு பணிகளை கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.

கொரோனா வைரஸ் தடுப்புப் பணிகளாக சமூக இடைவெளியையும், முகக்கவசம் அணிவதையும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். தவறுபவர்களுக்கு அபராதம் விதித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், மண்டல உதவி ஆணையர்கள் செந்தில்குமார்ரத்தினம், டி.ஆர்.ரவி, திரு.மகேஷ்கனகராஜ், ஏ.ஜே.செந்தில்அரசன், ம.செல்வன், செயற்பொறியாளர் (மேற்கு) மற்றும் ஸ்மார்ட் சிட்டி சரவணக்குமார், செயற்பொறியாளர்கள் (தெற்கு மண்டலம்) ஞானவேல், (மத்திய மண்டலம்) சசிப்பிரியா, (வடக்கு மண்டலம்) பார்வதி, தூய்மை பாரத திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமால், மண்டல சுகாதார அலுவலர்கள் ராதாகிருஷ்ணன், குணசேகரன், லோகநாதன், சந்திரன், மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.