மாணவர், பெற்றோருக்கு மன உளைச்சல் தருகிறது தேர்வு

இந்த ஊரடங்கு காலத்தில் தேர்வு என்பது மாணவர்களுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கும் மன இறுக்கம் தருகிறது. எனவே பத்தாம் வகுப்புத் தேர்வை ஊரடங்கு முடிந்த பின்னர் வைத்துக் கொள்ளலாமே என்று நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஜூன் 1 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என சமீபத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இதற்கு தேவையான ஏற்பாடுகளை அரசு செய்து வருவதாகவும், தேர்வு எழுத வரும் போக்குவரத்து வசதி உள்பட அனைத்து வசதிகளும் செய்துதரப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். மேலும் தேர்வு அறையில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு படித்துவரும் மாணவர்கள் பலர் ஊரடங்கு உத்தரவு காரணமாக அவர்கள் சொந்த ஊரில் இருப்பதால் அவர்கள் தேர்வு மையத்திற்கு வருவதில் சிக்கல் எழுந்து உள்ளதாகவும் எனவே தேர்வு நடத்தப்பட்டால் மாணவர்கள் மட்டுமின்றி அவர்களுடைய பெற்றோர்களும் தேர்வு மையத்திற்கு வர வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எனவே இ-பாஸ் உள்ளிட்டவை வாங்குவதில் சிக்கல்கள் இருப்பதால் தேர்வைத் தள்ளி வைக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பரீட்சை என்பதே மன உளைச்சல்தான். அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் பெற்றோருக்கும் பெரும் மனஇறுக்கம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயை செய்து பரிசீலிக்க வேண்டும்.