சுத்தம்… பேருந்துகளில் இருக்குமா?!

தமிழகத்தில் நாளை முதல் மாவட்ட வாரியாக பேருந்துகள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியே பேருந்துகள் இயக்கினாலும் அதில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த நிலைபாடு பாராட்டுக்குரியதுதான். அதேநேரம் பல ஆண்டுகளாக சுத்தப்படுத்தப்படாமல் ஓடிக்கொண்டிருக்கும் பேருந்துகள் சுத்தப்படுத்தப்படும் என்று எந்த அறிவிப்பும் இல்லை. மக்கள் நலனில் அக்கறை கொண்டு இயங்கும் இந்த அரசு மக்களை மட்டுமே சுத்தமாக இருக்க சொல்லுமா, இல்லை மக்கள் நலனைக் கருதி பேருந்துகளை இன்றே சுத்தப்படுத்தி இயக்குமா என்பது கேள்விக்குறிதான்.

ஆடிக்கு ஒருமுறை.. அமாவாசைக்கு ஒருமுறை என்றுகூட இல்லாமல் ஆயுத பூஜைக்கு மட்டும் சுத்தப்படுத்தப்படும் சில பேருந்துகள் ஆண்டு முழுவதும் கரும்புகைகளை வெளியிட்டுக் கொண்டு நள்ளிரவு வரையிலும் அதிகாலையிலும் இயக்கப்பட்டு லாபம் பெற்றுத்தரும் இந்த அரசு பேருந்துகள் சுத்தமுடன் இயங்கினால் நன்றாக இருக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

அத்துடன், பேருந்துகளின் கட்டணம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 50 சதவீத பயணிகள் ஏறினாலும் அரசுக்கு முழு வருமானம் கிடைத்துவிடும். மேலும், இப்போதைய பேருந்து இயக்க அட்டவணைப்படி ஒரு எல்லையில் இருந்து மறு எல்லை, அதாவது பேருந்து நிலையத்திலிருந்து போய் சேரும் இடம் வரை இடைநில்லாமல் ஓடக் கூடிய அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இயக்கினால் பேருந்து நிலையத்துக்கும் இயக்கப்படும் எல்லைக்கும் இடையே உள்ள பல்வேறு நிறுத்தங்களில் வாழும் மக்கள் என்ன செய்வார்கள்? ஒருவேளை பேருந்துகள் 50 சத அளவும் நிரம்பாமல் இருந்தால் அது இடையில் இருக்கும் வழித்தடங்களில் நின்று வரலாம். ஆகவே, இந்த பேருந்து சேவை மக்களுக்கு முழு அளவில் பயனளிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.