திரையுலக மின்னல் ‘மிருணாள் சென்’

உலகத் தரத்துக்கு இணையாக இந்தியத் திரைப்படங்களைத் தரம் உயர்த்திய வெள்ளித்திரை இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் மிருணாள் சென் (Mirunal Sen). இவர் 1923 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி வங்காள மாகாணத்தில் உள்ள ஃபரீத்பூரில் பிறந்தார்.
கல்கத்தாவைச் சேர்ந்த இவர் இந்தி, தெலுங்கு, ஒடிசா, வங்கம் ஆகிய 4 மொழிகளில் ஏறக்குறைய 34 திரைப்படங்கள், 14 குறும்படங்கள் 4 ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். இவரைப் பற்றியும் சில திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.
கொல்கத்தாவில் படிக்க வந்தபோது, ரூடால்ஃப் ஆர்ன்ஹைம் எழுதிய ‘ஃபிலிம் ஏஸ் ஆர்ட்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்ததற்கு பிறகு இவருக்கு திரைப்படங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. ஆரம்பகாலத்தில் இவர் திரைப்பட விமர்சனங்கள் எழுதி வந்தார். படித்து முடித்து சில காலம் மருந்துப் பொருள் விற்பனைப் பிரதிநிதியாக வேலையில் இருந்தார். பின் கல்கத்தா திரைப்பட ஸ்டுடியோவில் ஆடியோ தொழில்நுட்பப் பணியாளராக பணியாற்றினார். 1950 முதல் முழுநேர திரைப்படப் பணிகளில் இறங்கினார்.

இவரது முதல் திரைப்படமான ராத்போரே (விடியல்) (1955) வெற்றி அடையவில்லை. இரண்டாவதாக வந்த ‘நீர் ஆகாஷெர் நீச்சே’ (நீல வானத்திற்குக் கீழே) என்ற படம் இவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது. இதன் பிறகு ஐந்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கினார். இவரின் திரைப்படங்கள் நடுத்தர வகுப்பு மக்களின் குடும்பப் பிரச்னைகளை சித்தரிக்கும் படங்களாக, குறைந்த செலவில் எடுக்கப்பட்டவை.
இவர் இயக்கி 1969 இல் வெளிவந்த ‘புவன் ஷோம்’ (திரு. ஷோம்) என்ற திரைப்படம், உலக அளவிலும் இந்திய அளவிலும் இவரைப் பெரிய இயக்குநராக அடையாளப்படுத்தியது. இத்திரைப்படம் நவீன இந்திய திரைப்பட இயக்கத்தின் முக்கிய அடையாளமாகக் கருதப்படுகிறது.
பைஷேஷ்ரவன் (Wedding Day) (1960), ஏக் தின் பிரதிதின், காரிஜ், கல்கத்தா 71, அமர் புவன் ஆகிய திரைப்படங்களும் உலக அளவில் அங்கீகாரம் பெற்று பிரபலமானவை. இவரது பல திரைப்படங்கள் இந்தியாவில் விருதுகளை வென்றதோடு கேன்ஸ், பெர்லின், வெனிஸ், மாஸ்கோ, சிகாகோ, கெய்ரோ உள்ளிட்ட அனைத்து உலகத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு விருதுகளையும் வென்றன.
இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான தாதாசாஹேப் பால்கே விருது, பத்ம பூஷண் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். 1979 இல் உலக சினிமாவுக்கு இவரின் பங்களிப்பைப் பாராட்டி சோவியத் ரஷ்யாவின் ‘நேரு சோவியத் விருது’ உள்ளிட்ட பல உலக விருதுகளை இவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் 1998 முதல் 2003 வரை கௌரவ உறுப்பினராக இருந்தார். இவர் 2004 ஆம் ஆண்டு சுயசரிதை (Always Being Born) எழுதினார். தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தில் (என்எஃப்டிசி) உறுப்பினராக இருந்தார்.

இவரது துவக்க காலப் படங்களில் மார்க்சியத்தின் தாக்கம் வெகுவாக காணப்பட்டது. இவர் ஒரு மார்க்சிய கலைஞராக அடையாளம் காணப்பட்டார். இவரது பல திரைப்படங்கள் கல்கத்தா நகரைக் கதைக்களமாகக் கொண்டவை. அந்த நகர் மக்களின் அழகியலையும், மதிப்புமிக்க வாழ்க்கை அமைப்பையும், சமூக ஏற்றத்தாழ்வுகளையும், நகரின் தெருக்கள் வழியாக அதன் பழமையையும் காண்பித்ததுடன் அந்த நகரையும் ஒரு கதாபாத்திரமாகவே அமைத்திருப்பார்.
இந்திய சினிமாவில் புதிய அலையை உருவாக்கிய முன்னோடி, 70 ஆண்டுகள் திரைப் பணிசெய்தவர். இவருடைய சில படங்கள் வணிகத் திரைப்படங்களுக்கு இணையாக வெற்றி பெற்றவை. உயிரோட்டமான கதை, உரையாடல், திரைக்கதை, ஒளிப்பதிவு ஆகியவற்றுக்காகப் பேசப்படும் படைப்புகளின் சொந்தக்காரர். சத்யஜித் ராய், ரித்விக் கடக் ஆகிய திரையுலக மேதைகளின் காலத்தில் வங்கத்தின் இன்னொரு திரை ஆளுமையாக மிளிர்ந்தவர். மக்களுடைய பிரச்னைகளைச் சொல்வதற்குத் திரைப்படத்தைவிட நல்ல கலைவடிவம் இல்லை என்பதில் இவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இத்துணை சிறப்புகளைப் பெற்ற இந்தியத் திரையுலகின் தலைசிறந்த அடையாளமாகத் திகழ்ந்த இவரது இறுதிப் பயணம் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 30 இல் முடிந்தது.
இவரது படங்கள் திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கும் மேலும் பல திரைப்படக் கல்விப் பாடத்திட்டத்திலும் பாடமாக உள்ளது. திரைப்படத் துறை ஆர்வமுள்ளவர்கள் இவரது படங்களைப் பார்ப்பதன்மூலம் பல திரை நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.

பூந்தமிழன்