இந்தியாவின் தாகம் தீர்க்கும், சத்குருவின் நதி மந்திரம்

சத்குரு அவர்கள் நமது தேசத்தின் ஜீவநதிகளை மீட்டெடுத்து, அவை கரைபுரண்டு ஓடும் நிலையை மீண்டும் கொண்டு வரும் முயற்சியில் தற்சமயம் ஈடுபட்டுள்ளார். இதற்காக “நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்” எனும் இயக்கத்தைத்  துவக்கியுள்ளார்.

நதிக்கரை ஓரத்தில் வளர்ந்த நாகரிகம் நம்முடையது. நமது தேசத்தின் உயிர்நாடி நமது நதிகளே. ஆனால், ஆண்டு முழுவதும் வற்றாத ஜீவநதிகள் என்று பெருமை பெற்ற காவிரி, கிருஷ்ணா அல்லது நர்மதை என எந்த நதியாக இருந்தாலும், இன்று அவை நீர் வரத்து குறைந்து அபாயகரமான நிலையில் இருக்கிறது. அடுத்த 50 ஆண்டுகளில் நமது பெரும்பாலான நதிகளில் எதுவுமே ஜீவநதியாக இருக்காது. மழைக்காலத்தில் மட்டும் மழைநீர் வடியும் வடிகாலாக மாறிவிடும்.

மக்கள் தொகை பெருக்கத்தினாலும், வேகமான வளர்ச்சியின் காரணமாகவும் ஏற்கனவே பல சிறு நதிகள் காணாமல் போய்விட்டபீ. 1947 ,ல் ஒரு தனிமனிதனுக்கு இருந்த நீரின் அளவில் 75 சதவிகிதம் குறைவாக நமக்குக் கிடைக்கிறது என்பதுடன், கிட்டத்தட்ட 25 சதவீத இந்திய நிலப்பரப்பு பாலைவனமாக மாறி வருகிறது.

நதிகளைக் காக்கும் திட்டம்

“இப்போதைய உடனடி தேவை, விசாலமான திட்டத்துடன் நதிகளுக்கு புத்துயிர் ஊட்டுவதுதான். நதியின் மொத்த நீளத்திற்கும், அதன் இரு கரையோரங்களிலும் குறைந்தது 1 கிமீ அகலத்திற்கு நிழல் தரும் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும். அரசு நிலமாக இருந்தால் இயற்கைக் காடுகளும், தனியார் நிலமாக இருக்கும் பட்சத்தில் வேளாண் காடுகளும் உருவாக்கப்பட வேண்டும்.

“நமது நாட்டில் உருவாகும் நதிகள் வனப்பகுதிகளால் வளர்ந்தவை. மழை பொழிய மரங்கள் உதவுகின்றன. வனப்பகுதியில் அடர்த்தியாக உள்ள தாவரங்கள் மழைநீரை நன்கு உறிஞ்சிக் கொள்கின்றன. அவற்றின் வேரில் சேகரித்திருக்கும் அபரிமிதமான நீர் மெல்லக் கசிந்து துளித்துளியாக சேர்ந்து சிற்றோடையாக மாறுகிறது. இப்படி உருவாகும் சிற்றோடைகள் சேர்ந்து ஓடையாகி, அளவிலும் வேகத்திலும் பெருகும்போது நதியாக பாய்கிறது. நதிகளை மீட்கும் திட்டம் நடைமுறையில் சாத்தியமாக வேண்டும் என்றால் நாட்டின் கொள்கை அளவில் மாற்றம் தேவை. எனவே அரசின் ஆதரவு இதற்கு மிகவும் முக்கியமாகிறது. நதிக்கரை ஓரங்களில் உள்ள விவசாயிகளுக்கு வேளாண் காடுகள் முறையில் பழமரங்கள் வளர்ப்பது பற்றிய விழிப்புணர்வும் ஊக்கமும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

விவசாயிகளுக்கு ஆதரவாக நமது உணவில் 30 சதவீதம் அளவிற்கு மரங்களில் இருந்து கிடைக்கும் பழங்களை உணவாக எடுத்துக் கொள்ள நாமும் பழகவேண்டும். இதன்மூலம், 3 முதல் 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் குறைந்தது 3 மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

மேலும் நதிகளை மீட்பது என்பது ஒரே நாளில் நடந்து விடக்கூடியதும் அல்ல. நமது செயல் பலன்தருவதற்கு சில காலம் எடுத்துக் கொள்ளும். அதுவரை விடாமுயற்சியுடனும் பொறுமையுடனும் காத்திருக்க வேண்டும். யூ- ட்யூபில் இதை நீங்கள் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள், பூக்களின் அரும்பு ஒவ்வொரு இதழாக மொட்டவிழ்ந்து மலர்வதை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு இதழாக மலர்வதைப் பார்க்கவே அற்புதமாக இருக்கும்தானே. அதைப் பதிவு செய்ய அந்த கலைஞர்கள் எடுத்துகொண்ட முயற்சியும் உழைப்பும், மலர் மலர்வதைப் பார்க்கும் ஒவ்வொருவருக்குள்ளும் ஆனந்தத்தை ஏற்படுத்தும். இதுவும் அப்படித்தான்.

நமது முயற்சியின் பலன், நமது நதிகள் மீண்டும் பொங்கி பிரவாகமாக கண்ணுக்கு நிறைவாக ஓடும்போதுதான் நிறைவாக இருக்கும். கண்ணுக்கு மட்டுமல்ல, அப்போதுதான் நம் மக்கள் ஒவ்வொருவரின் வயிறும் நிறையும். ஒவ்வொருவரும் என நாம் குறிப்பிடுவது, தண்ணீர் பருகும் ஒவ்வொரு மனிதரையும்தான். தண்ணீர் பருகும் ஒவ்வொரு மனிதரும் நிச்சயமாக நதிகளை மீட்க துணைநிற்க வேண்டும் தானே.

குறிப்பு:

80009 80009 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து நதிகளை மீட்க உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்.

“நதிகளை மீட்போம், பாரதம் காப்போம்” எனும் இந்த தேசிய அளவிலான விழிப்புணர்வு இயக்கம் குறித்து மேலும் தெரிந்துகொள்ளவும், இதில் நீங்கள் எப்படி பங்கு வகிக்கலாம் என்பதையும் அறிந்துகொள்ள, Tamil.RallyForRivers.org என்ற இணைய முகவரிக்குச் செல்லவும்.