தாயின் கருப்பையிலேயே இசை தொடங்குகிறது

தமிழர்களிடம் மட்டும் இல்லை, இந்த உலகில் யாரைக் கேட்டாலும் சரி, இசையைப் பிடிக்காதவர்கள் இல்லை! அனைவருக்கும் பிடித்த பாடல்கள், பிடித்த பாடகர், பிடித்த இசையமைப்பாளர் என இருக்கத்தான் செய்யும். ஆனால், ஏன் எல்லோருக்கும் இசை என்றால் பிடிக்கிறது? சிலருக்கு இசை ஒரு போதை போன்று மகிழ்ச்சியைக் கொடுக்கிறதே! இசையில் அறிவியல் ரீதியாக அப்படி என்னதான் இருக்கிறது?

நம்மில் பலர் புரியாத மொழி பாடல்களை கேட்டு பல நேரம் அந்த பாடலை நம்முள் முனங்கி கொண்டே இருப்போம். அந்த மொழி, வார்த்தைகளின் அர்த்தம் என்னவென்று தெரியாதபோதும் இசைக்காகவே நாம் அதை கேட்போம். இசை எல்லோருக்குமே புரிகின்ற ஒரு மொழி என்றே கூறலாம்.
நமது உணர்ச்சிகளை வார்த்தைகளால் வெளிப்படுத்துவதைவிட இசையால் வெளிப்படுத்துவது மிகவும் இலகுவாக இருக்கும். இசை என்பது வேறு ஒன்றும் இல்லை பல அதிர்வெண்கள் கலந்து விதவிதமான வடிவங்களில் காற்றில் மிதந்து நமது செவிகளை அடைவதுதான் இசை.
நாம் இந்த பூமியில் பிறக்கும் முன்னரே நம்மில் பலருக்கு இசை அறிமுகமாகிவிட்டது. என்ன ஆச்சிரியமாக உள்ளதா! எப்படியென்றால் நாம் நமது தாயின் கருப்பப்பையில் இருக்கும் போது கண்களால் எதையும் பார்க்க முடியாது. அனால், காதுகளால் கேட்கமுடியும், ஆம் நாம் தாயின் கருவறையில் இருந்த போது தாயின் இதய துடிப்புடன் இசையையும் ரசித்திருக்கிறோம்.
இசை கேட்பதால் மகிழ்ச்சி எப்படி உண்டாகிறது? உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான சம்பவங்கள் நமது உடலுக்குள் நடைபெறும்போது நமது மூளை மகிழ்ச்சி மற்றும் திருப்தி போன்ற உணர்ச்சிகளை தூண்டிவிடுகிறது. உதாரணத்திற்கு பசிக்கும் போது நாம் தேவைக்கு ஏற்ற மாதிரி உணவு அருந்திவிட்டதும் பசி தீர்ந்துவிட்டு, உடனடியாக சந்தோஷமும் திருப்தியும் அடைந்து விடுகின்றோம். ஆனால், உண்மையில் அந்நேரம் என்ன நடைபெறுகிறது என்றால் டோபமைன் (dopamine) எனப்படும் வேதியியல் பொருள் நமது மூளைக்குள் வெளியிடப்படுகிறது. இது நரம்புக்கடத்தியாக (neurotransmitter) பணிபுரிந்து இந்த சந்தோஷமும் திருப்தியும் கலந்த உடல்நிலைக்குக் காரணமாக இருக்கிறது. இதேபோன்று தான் போதைப்பொருட்கள் பாவிக்கும் வேளையில் டோபாமைன் வெளியிடப்பட்டு நாம் வானத்தில் மிதப்பது போல் இருக்கிறது. நமது உடலில் அந்த போதைப்பொருள் குறையும்போது டோபாமைன் வெளியிடுவதும் நிறுத்தப்படுகிறது. எனவே, தொடர்ந்து மகிழ்ச்சி நிலையை அடைவதற்காக மேலும் அந்த போதைப்பொருளை உள்வாங்க வேண்டியதாகிவிடும். அத்துடன் நமது உடலும் அந்த போதைப்பொருளுக்கு அடிமை ஆகி விடுகிறது.
நாம் இசையை ரசிக்கும் போது நமது உடலில் பல செயல்கள் நடைபெறுகின்றன. இரத்த அழுத்தம் அதிகரித்து நமது மூளையில் உள்ள பல்வேறு பகுதிகள் இயங்கத் தொடங்கிவிடுகின்றன. இசை, நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமானது இல்லை என்றாலும், அதை ரசிக்கும் போது நமது மூளையில் டோபாமைன் வெளியிடப்படுகிறது. அதன் விளைவு என்னவென்று உங்களுக்கு இப்போ தெரியும். நாம் மகிழ்ச்சி கலந்த திருப்தி நிலையை அடைந்து விடுகின்றோம். இன்று வரை அதன் காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துவிடவில்லை. போதைப்பொருட்கள் நம்மை அடிமை ஆக்குவது போல் இசையும் ஒரு விதமாக நம்மை அடிமை ஆக்கிவிடுகிறது. ஒவ்வொரு மனிதனின் இசை சுவை வித்தியாசமாக இருந்தாலும் அதன் விளைவு எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கிறது.
இசையில் இன்னும் ஓர் மிக முக்கியமான விசேஷம் இருக்கிறது! சிறுவர்களின் வளர்ச்சி நேரம் இசை அவர்களின் மூளை விருத்தியை தூண்டுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிந்துள்ளார்கள். அதுவும் அவர்களின் நுண்ணறிவு எண் எனப்படும் Intelligence Quotient (IQ) அதிகரிப்பதற்கு இசை கேட்டாலே போதும் என்று கூறுகின்றார்கள். எனவே, பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை சிறு வயதினிலேயே சங்கீதம், பியானோ, புல்லாங்குழல், மிருதங்கம் போன்ற ஏதாவது ஒன்றை கற்றுகொள்ள விடுங்கள்! அவர்கள் மேலும் புத்திசாலிகள் ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன!

இசை ஒரு கண்ணுக்கு தெரியாத நண்பன் என்றே கூறலாம். ஏனென்றால், இன்பம், துன்பம் எதுவானாலும் சரி இசை நம் செவிகளில் ஒலிக்கும் போது ஆறுதல் அளிக்கவும் மன நிம்மதியையும் அது தருகிறது. ஆகையால் நல்ல இசையை கேளுங்கள், மொழியையும் தாண்டி இசையை ரசியுங்கள்…