குடிநீர் இணைப்புக்கான வைப்புத்தொகையை குறைக்க கோரிக்கை

தமிழகத்தில் முக்கிய மாநகராட்சியாக கோவை மாநகராட்சி உள்ளது. 100 வார்டுகளை உள்ளடக்கிய கோவை மாநகராட்சி நிர்வாக வசதிக்காக கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் என ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சியின் ஏப்ரல் முதல் மார்ச் வரை உள்ள முழு நிதியாண்டு இரண்டு அரை நிதியாண்டுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடப்பு நிதியாண்டுக்கான சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி போன்றவை வசூலிக்கப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சி நிர்வாகத்தில் 4.75 லட்சத்திற்கும் மேற்பட்ட வரிவிதிப்புதாரர்கள் உள்ளனர். அதே போல், 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புதாரர்கள் உள்ள னர். மாநகராட்சி நிர்வாகத்தில் சொத்துவரி செலுத்தும் போதே, குப்பை வரிக்கான தொகையும் வசூலிக்கப்படுகிறது. அதேபோல், மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் இணைப்பு பெற மாநகராட்சி வசம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு வைப்புத்தொகை பெறப்பட்ட பின்னர், மாநகராட்சி சார்பில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

குடியிருப்பை சேர்ந்தவர்கள் குடிநீர் இணைப்பு பெற விண்ணப்பித்தால் ரூ.ஆயிரம் வைப்புத்தொகையும், வணிக பயன் பாட்டுக்கு பயன்படுத்தப்படும் கட்டடங்களை சேர்ந்தவர்கள் குடிநீர் இணைப்பு பெற விண்ணப்பித்தால் ரூ.3 ஆயிரம் வைப்புத்தொகையும் செலுத்த வேண்டும். இதில் மாநகராட்சி நிர்வாகத்தின் சார் பில் வைப்புத்தொகை திருத் தியமைக்கப்பட்டு உள்ளது. திருத்தியமைக்கப்பட்ட கட்டண விகிதங் களின் படி குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் குடியிருப்பை சேர்ந்தவர்கள் ரூ.5 ஆயிரம், வணிக பயன்பாட்டை சேர்ந்தவர்கள் ரூ.10 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த திருத்தியமைக்கப்பட்ட வைப்புத்தொகை மாநகராட்சியால் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கு முன்னர் குடிநீர் இணைப்பு பெற்றவர்கள் முன்னர் குடிநீர் இணைப்பு பெற்ற போது விண்ணப்பித்த தொகைக்கும், திருத்தியமைக்கப்பட்ட வைப்புத் தொகைக்கும் இடையே உள்ள நிலுவைத்தொகையை செலுத்தவும் மாநகராட்சியால் அறிவிக்கப் பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இது தொடர்பான நோட்டீஸ் சம்பந்தப் பட்ட வரிவிதிப்புதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

மாநகராட்சியின் இந்த அதிகப்படியான திருத்திய மைக்கப்பட்ட வைப்புத் தொகைக்கு பொதுமக்கள் தரப்பில் அதிருப்திக்குரல் எழுந்துள்ளது. மாநகராட்சி திருத்தியமைத்த இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும். முந்தைய கட்டண விகிதத்தையே பின்பற்ற வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி திருத்தியமைத்த இந்த அதிகப்படியான வைப்புத்தொகையை குறைக்க வலியுறுத்தி பல்வேறு கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கோவை மாநகராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: மாநகராட்சி பகுதியில் ஒரு சில பகுதிகளை தவிர்த்து பெரும்பாலான பகுதிகளில் மாதத்தில் மூன்று நாட்கள் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் குடிநீர் வைப்புத்தொகை அதிகப்படியாக மாநகராட்சி நிர்வாகம் உயர்த்தி இருப்பதும், முன்னரே இணைப்பு பெற்றவர்கள் நிலுவைத்தொகையை வரும் 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என மாநகராட்சி அறிவித்து இருப்பதும் கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. வைப்புத்தொகை உயர்த்தப்படுவது இயல்பானது. ஆனால், அதிகப்படியான வைப்புத்தொகை உயர்வு அதிர்ச்சியாக உள்ளது. குடிநீர் கட்டணத்திற்கான வைப்புத்தொகை உயர்த்தப்பட்டதை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும். வைப்புத்தொகையை குறைக்க வேண்டும் அல்லது முன்னரே இருந்த வைப்புத்தொகை அளவை பின்பற்ற வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.