ஆசிரியர்களின் தரம் மிக மோசமாக உள்ளது: உயர்நீதிமன்றம் வேதனை

ஐந்தாம் வகுப்பு மாணவன் தன் பெயரை கூட எழுத முடியாத அளவுக்கு அவரது ஆசிரியர்களின் தரம் மிக மோசமாக உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
வரும் 2017-18ம் கல்வி ஆண்டுக்கு கூடுதலாக மாணவர்களை சேர்த்துக்கொள்ள அனுமதி கோரிய விண்ணப்பத்தை நிராகரிப்பது தொடர்பாக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் தென்மண்டல இயக்குனர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய கோரி, திருச்சியை சேர்ந்த எஸ்.வி.ஐ ஆசிரியர் கல்லூரி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், பி.எட், எம்.எட் படிப்புகளை வழங்கும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கு, தேசிய ஆசிரியர் கவுன்சில் எந்த கொள்கையும் இல்லாமல் இயந்திரத்தனமாக அனுமதி வழங்குவதால், நாடு முழுவதும் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் காளான் போல் முளைத்துள்ளதாக குறை கூறினார்.

இதன் காரணமாக ஐந்தாம் வகுப்பு மாணவன் தன் பெயரை கூட எழுத முடியாத அளவுக்கு அவர்களது ஆசிரியர்களின் தரம் மிக மோசமாக உள்ளதாக உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. இதற்கு “லெட்டர் பேர்டு”கல்வி நிறுவனங்களில் படித்து வெளிவரும் ஆசிரியர்கள் தான் காரணம் எனவும் தெரிவித்தார்.

இந்த வழக்கில் டில்லியில் உள்ள தேசிய ஆசிரியர்  கவுன்சில் இயக்குனர், தமிழக உயர்கல்வி துறை செயலாளர், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைகழகம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர்களை எதிர் மனுதாரர்களாக சேர்த்து நீதிபதி உத்தரவிட்டார்.