திசையெங்கும் திருப்புமுனைகள்

விருப்பங்களால் ஆனதல்ல வாழ்க்கை;  திடீர் திடீர்  திருப்பங்களால் ஆனது.      திருப்பங்க ளையே விருப்பங்களாக மாற்றிக் கொள்பவர்கள் வெற்றிவீதியில்      முடிவில்லா உலாப் போகின்றார்கள். திருப்பங்களைக் கண்டு திடுக்கிட்டு வீழ்பவர்கள் எழமுடியாமல் தோல்வியைத் தழுவி வேதனைகளில் வீழ்ந்து தேம்பி அழுகின்றார்கள்.

வாழ்க்கை எதிர்பார்ப்புகளை கொண்டுதான் உருவாக்கப்படுகின்றது என்றாலும்        திருப்பங்களால்தான் முழுமையடைகின்றது. வெற்றியும் தோல்வியும் வாழ்க்கை என்கிற நாணயத்தின் இருபக்கங்கள் என்றாலும், வெற்றி வந்தால் துள்ளி எழுகின்றோம்; தோல்வி நேர்ந்தால் துவண்டு போகின்றோம். இந்த இருவிதமான அணுகுமுறையும் சரியானது அல்ல. ஏனென்றால் வெற்றி என்பது நிலையானதும் அல்ல; முடிவு என்பது முடிவானதும் அல்ல. ஆகவே நமது அணுகுமுறைத் தெளிவாக இருக்க கீழ்காணும் கருத்து உதவியாக இருக்கும்.

வெற்றி வந்தால் பணிவு அவசியம்

தோல்வி வந்தால் பொறுமை அவசியம்

எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம்

எதுவந்தாலும் நம்பிக்கை அவசியம்

என்ற கருத்தை எனது நூலொன்றில் பதிவு செய்துள்ளதை இங்கு நினைவு  கூறுவதில் மகிழ்கிறேன்.

வாழ்க்கைப் பயணத்தில் தொடர்ந்து சாதனை மைல் கற்களை உருவாக்கிக் செல்வதற்கு  தொடர்ந்து கற்றல் அவசியம். நேற்றைய பட்டதாரி; இன்று படிப்பதை நிறுத்திக் கொண்டால் நாளை படிக்காதவன் ஆகிவிடுவான். ஆகவே தொடர்ந்து கற்றலே வாழ்க்கையை மகிழ்வுடையதாகவும் மேன்மை மிக்கதாகவும் உருவாக்கிக் கொள்வதற்கு உதவும். இங்கு கற்றல் என்பது வகுப்புப் பாடத்தை  மட்டும் குறிப்பதல்ல; வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொள்வதையும் உள்ளடக்கியதாகும்.

வாழ்க்கை அறிவொளியால் செதுக்கப்பட்டு அனுபவத்தால் புதிப்பிக்கப் படுகிறது. எல்லாவற்றையும் அனுபவப்பட்டுத்தான் கற்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அனுபவசாலிகளிடமிருந்தும் கற்றுக் கொள்ளலாம் என்றாலும் அதற்கான வாய்ப்புகள் எளிதில் கிடைப்பதில்லை. அனுபவத்தில் இருந்து கற்றுக் கொள்வதற்கான பயிற்சி மேடையை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கத்தை மனதில் கொண்டு “திருப்புமுனை” என்ற ஓர் உன்னத அமைப்பைக் கோவையில் தொடங்கி இருக்கின்றார்கள். அதன் தொடக்க விழாவில் நான் கலந்து கொண்டேன்.

வழிகாட்டிகள் இல்லையே என்று கலங்கிக் கொண்டும் புலம்பிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு திசைகாட்டும் கலங்கரை விளக்கமாக இந்த அமைப்புத் திகழும் என்பதில் எனக்கு பூரண நம்பிக்கை உண்டு. இதன் அமைப்பாளர் பன்னீர்செல்வம் அவர்கள் தெளிவான சிந்தனையும் பொதுநல நோக்கமும் கொண்டவர். வேதாத்திரயத்தையும் விஞ்ஞானத்தையும் இருவிழியாகக் கொண்டு, யோகமுத்திரையை தியானமாகக் கொண்டு வாழ்வாங்கு வாழ்பவர். அவருக்கு எனது வணக்கத்தைத் தெரிவித்து விழாவில் பேசத் தொடங்கினேன்.

“உலக வரலாறு என்பது வந்துபோனவர்கள் கணக்கல்ல; பிறருக்கு தந்து போனவர்களின் கணக்கு” என்றேன். “ஆகவே உங்களுடைய வருகையை      வரலாற்றில் பதிவு செய்ய விரும்பினால் பிறருக்கு உதவி செய்யுங்கள்” என்றேன். வாழ்வாங்கு வாழ விரும்புகின்றவர்கள் மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டும். எந்த நிலைக்கு வந்தாலும் வந்த நிலையை மறவாமல் நன்றியுணர்வுடன் அனைவரையும் மதித்து வாழ வேண்டும்.

உயர வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகின்றார்கள். ஆனால் எவ்வாறு உயர்வது என்று தான் புரிவதில்லை. உயர்விற்கு முக்கியமான மூன்று காரணிகள் என்னவென்றால் அவை செயல்திறன், திறமையை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பு, தெய்வின்றி உழைக்கத் தேவையான ஊக்குவிப்பு ஆகியவையாகும். இம்மூன்றும் சேரும்போதுதான் ஒருவரால் உயரங் களைத் தொடமுடியும். பலருக்குத் திறன் இருக்கும் ஆனால் அதனை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புக் கிடைக்காமல் இருக்கும். சிலருக்கு இவ்விரண்டும் இருந்தும் போதுமான ஊக்குவிப்பும் பாராட்டும் கிடைக்காமல் இருக்கும். ஆகவே திறன் மிக்கவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும். அவ்வாய்ப்பு தேடிவரும் என்று காத்திருக்காமல், வாய்ப்பைத் தேடிப் போக வேண்டும்.

வாய்ப்பின் கதவுகள் வரிசையாகத் திறந்து இருந்தாலும், போதிய விழிப்புணர்வும் சூழ்நிலையறிவும் இல்லை என்றால் வாய்ப்புகளை இனங்கண்டு பற்றிக் கொள்ள முடியாது. ஆகவே எப்பொழுதும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இதற்கு முதலில் உங்களுடைய இலட்சியம் என்ன? என்பதில் தெளிவும் உறுதியும் இருக்கவேண்டும். ஆம்! நீங்கள் பயணப்படுவது முக்கியமல்ல; எதை நோக்கிப் பயணப்படுகின்றீர்கள்? என்ன நோக்கத்திற்காகப் பயணப்படுகின்றீர்கள்? என்பது போன்றவைகளும் முக்கியமே! ஆகவே, சுயஆய்வும், குறிக்கோளும் தெளிவாக இருந்தால், பயணத்தில் எதிர்கொள்ளும், தடைகளையே படிகளாக மாற்றும் தன்னம்பிக்கையும் துணிவும் தானாகவே வந்துவிடும்.

வாய்ப்புகள் கிடைத்தாலும், அவற்றைச் செம்மையாகப் பயன்படுத்தி உயர்வதற்குப் போதிய திறமைகளும் செயல்பாடும் வேண்டும். உழைப்பதற்கு முழுமையாக முயற்சிப்பதற்கும் தயங்கக் கூடாது. தொடர்ந்து தோல்விகள் வந்தாலும், நமது முயற்சிகளை கைவிடக் கூடாது.

முயற்சிக்கும்போது, தோல்வியைக் கண்டு மனச்சோர்வும் விரக்தியும் ஏற்படுவது இயற்கையே. ஆனால் அதைச் சுய ஊக்குவிப்பின் மூலம் விரட்டியடித்து விட்டு, தொடர்ந்து அதிக ஆற்றலுடன் முயலமுடியும். மற்றவர்களுடைய பாராட்டுக்கும் ஊக்குவிப்பிற்கும் ஏங்கி நிற்காமல் சாதனை புரிவதில் கவனம் செலுத்தினால் போதும், விருதுகளும் பாராட்டுக்களும் தானாகவே நம்மைத் தேடிவரும்.

சாதிக்க நினைப்பதோடு நின்றுவிடாமல் செயலில் இறங்க வேண்டும். நீந்த வேண்டும் என்ற எண்ணத்துடன் கரையில் நிற்பதால் நீச்சலைக் கற்க முடியுமா? செயலில் இறங்காமல் வெறும் கனவுகளுடன் தவமிருப்பதால் எந்த பயனும் ஏற்படப் போவதில்லை என்பதை உணர்ந்து செயலில் இறங்கினால், திருப்பு முனைகளில் சரித்திரத்தின் திசைகளை உருவாக்க முடியும்.

சாதனை மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் புரட்டினால், அவர்கள் எவ்வாறு வீழ்ச்சியை எழுச்சியாக்கி வென்றார்கள் என்பது புரியும்.

“திருப்புமுனை”யின் நோக்கமும் செயல்திட்டமும் என்னைக் கவர்ந்தது. மாதந்தோறும் ஒரு நிகழ்வு. அதில் வாழ்வியல் நிபுணர்களை அழைத்து வந்து தங்களுடைய அனுபவத்தையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளச்      செய்கின்றார்கள். ஒரு சொல் போதும், ஒருவருடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்கு; ஒரு நூல் போதும் ஒருவருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போடுவதற்கு;  ஒரு நண்பன் போதும் ஒருவனுடைய வாழ்க்கையை வளப்படுத்துவதற்கு. ஒரு அமைப்புப் போதும் பலருடைய வாழ்க்கையைத் திருப்பி  விடுவதற்கு!

நேரம் போகவில்லை என அலுத்துக் கொள்பவர்கள், மாதத்தில் ஒருநாள், “திருப்பு முனை”யின் நிகழ்வில் கலந்து கொண்டு, தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளலாம்.

விழாவில் இளம் வயதிலேயே  பெரிய சவால்களைச் சந்தித்து தொழிலில் உயர்ந்து வரும் சென்னை மொபைல்ஸ் நிறுவனர் திரு.கி.வி.சம்சு அலி அவர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கிச் சிறப்பித்தது பாராட்டுக்குரியது.திருப்புமுனை அமைப்பின் தலைவர் திரு செல்வன்  அவர்களுக்கும், செயலர் மாரிமுத்துராஜ் அவர்களுக்கும் அன்பு சகோதரர் தடாகம் திரு.சக்திவடிவேல் அவர்களுக்கும் நன்றி தெரிவித்து விடைபெற்றேன்.

இதுபோன்ற தன்னார்வ அமைப்புகள், ஊர்கள் தோறும் தோன்றினால், திசைமாறிப் போகும் இளைஞர்களைத் திசை திருப்ப முடியும்! வெற்றியை நோக்கிய திருப்பு முனைகளை உருவாக்க முடியும்.

சிந்தனைக் கவிஞர். டாக்டர்.கவிதாசன்,
இயக்குனர் மற்றும் தலைவர், மனிதவள மேம்பாட்டுத்துறை, ரூட்ஸ் நிறுவனங்கள்.