சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி எச்சரிக்கை

கொரோனா தொற்று தொடர்பாக வீடுகளில் ஒட்டப்படும் நோட்டீஸ்களை அடிப்படையாகக் கொண்டு சமூக வலைதளங்களிலே, செய்தியாகவோ பிரசுரம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் வகுத்துள்ள வழிகாட்டுதலின்படி, கோவை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா தொடர்பாக சமூக வலைதளங்களில் வீண் வதந்தி பரப்புவோரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பேசுகையில்,

கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் அனைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திட ஆணையிட்டிருந்தார்கள். அதன்படி, கோவை மாவட்டத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து  வருகை தந்தவர்கள் அனைவரையம் கண்டு தனிமைப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அத்துடன், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டிலேயே தனித்திருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு உள்ளவர்களை இனம்கண்டு கோவை மாவட்டத்தில் 713 வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.  இந்நிலையில் அவ்வீட்டாரின் பெயர்கள் மற்றும் விவரங்களை சமூக வலைதளங்கள், நாளிதழ்கள் மற்றும் பொதுவெளியில் பரப்பப்படுவதாக தொடர்ந்து புகார் பெறப்பட்டு வருகின்றது.

அதுபோலவே, கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளதா என சோதித்திட அரசு மருத்துவமனைக்கு வந்து சோதித்து கண்காணிப்பில் உள்ளவர்கள் பெயர் மற்றும் விவரங்கள் குறித்தும் சமூக வலைதளங்கள், ஊடகங்கள், பொதுவெளிகளில் தவறான தகவல் வரப்பெறுகிறது. இதுபோல தவறான தகவல்களையும், தனிநபர் பெயர் மற்றும் அவர்களின் பிற விவரங்களையும் ஊடகம் சமூக வலைதளங்கள் மூலம் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என்றும் பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பரப்ப வேண்டாம் என்றும் எச்சரிக்கப்படுகின்றது. கொரோனா வைரஸ் தொடர்பாக அரசு மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் செய்தி விவரங்கள் மட்டுமே உண்மையானது என தெரிவிக்கப்படுகின்றது. என மாவட்ட  ஆட்சித்தலைவர் ராசாமணி தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.