மனதைச் செம்மையாக்கும் கலை!

“மனம் போல் வாழ்க்கை” என்பார்கள். மனம் நண்பனாகவும் எதிரியாகவும் மாறும் தன்மையுடையது. மனம் ஆற்றலின் அட்சய பாத்திரமாகவும் ஆக்க எண்ணங்களின் உதயக் களமாகவும் இருந்தால் அது ஒரு உற்ற நண்பனைப் போல நன்மை செய்கிறது. சாதாரணமானவனையும் சரித்திர நாயகனாக்குகின்றது. எண்ணியதை எய்தும் வரை போராட வைக்கின்றது. உச்சியைத் தொடும்வரை ஓய்வில்லாமல் உழைக்க வைக்கின்றது. தோல்வியைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து முயல வைக்கின்றது. சலிப்பில்லாமல் தளராது செயல்பட வைக்கின்றது.

அதே நேரத்தில், எதிர்மறை எண்ணங்களைத் தோற்றுவித்துத் தோல்வியின் பள்ளத்தாக்கில் நம்மை விழவைத்து வேடிக்கை பார்க்கின்றது. நமக்குள்ளாகவே இருந்து எதிரியைப் போலச் செயல்பட்டுக் கோழையா கவும், தாழ்வு மனப்பான்மையுடனும் சுமையென நினைக்க வைத்து அச்சத்திற்குள் சிறைவைத்து ஆனந்த மடைகின்றது.

ஆம்! மனதைச் சரிசெய்யாமல், எதையும் சாதிக்க முடியாது. ஆனந்தமாகவும் அமைதியாகவும் வாழமுடியாது என்பது உறுதி. மனதைச் சரிசெய்யும் கலையைக் கற்றவர்கள் மகிழ்ச்சியாகவும் மனநிறைவுடனும் மற்றவர்களுக்கு உதவியாகவும் வாழ்கின்றார்கள். சலனத்தாலும் சஞ்சலத்தாலும் அவர்கள் கலங்குவது மில்லை, ஏங்குவதுமில்லை. சரியான எதிர்பார்ப் புடன் சந்தோஷமாக வாழ்கிறார்கள்; வளர்கின்றார்கள்.

உடல், மனம், ஆன்மா என்ற மூன்றினால் உருவாக்கப்பட்டவன் மனிதன். மனம் படைத்ததால் தான் மனிதன் என்றும் பலர் சொல்வார்கள். உடலைக் காணலாம்; மனதை உணரலாம்; ஆனால் ஆன்மாவை எவ்வாறு அடையாளம் காண்பது? என்ற எண்ணம் எனக்குள் எழுந்தபோதுதான் வேதாத்திரி மகரிஷி அவர்களுடைய தொடர்பு கிடைத்தது. ஆன்மாதான் உடலின் இயக்க சக்தி. உயிரின் மூலம் என்பது புரியத் தொடங்கியது. உடலும் உடலைச் சார்ந்த மனமும் அழியக் கூடியது. ஆனால் ஆன்மா அழிவற்றது என்பது புரியத் தொடங்கியது. ஆன்மாவில் உண்டாகும் பதிவுகளே தலைவிதியாக மாறுகிறது.

ஆன்மிகம் என்ற புனிதவெளியில் பயணப்படுவது பரவசமானது. எல்லா உயிர்களிலும் நம்மை காண்பதும், எல்லா உயிர்களையும் நமக்குள் காண்பதும் அலாதியானது. இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் முயன்று பாருங்கள். மூலாதாரத்திற்குள் மூழ்கிவிடுவீர்கள்.

அலையைப் போல ஓயாமல் அலைகின்ற எண்ணங்களைக் கவனித்து ஆராய்ந்து, தீய எண்ணங்களை நீக்கிப் பின்னர் தூய எண்ணங்களால் மனதை நிரப்பும் வழியைக் கற்றுக் கொள்ள வேண்டும். எண்ணங்கள் மேலோங்கி உயர வேண்டும். வாழ்க்கையை வளப்படுத்த விரும்புகின்றவர்கள் முதலில் எண்ணங்களை வளப்படுத்த வேண்டும். எண்ணங்களை வளப்படுத் தினால் வாழ்க்கை வசப்பட்டுவிடும்.

நாகரிகத்தின் உச்சியை நோக்கிப் பயணப்படும் போது, கலாச்சாரத்தின் வேர்களைப் பாதுகாக்கத் தவறிவிடக் கூடாது.

பண்பாடு இல்லாத வாழ்க்கையில் தனிமனித ஒழுக்கமும், சமுதாய ஒழுங்கும் இருக்காது. அவ்வாறு ஒழுங்கில்லாத சமுதாயத்தில் அமைதியும் நிம்மதியும் இருக்காது. அதனால்தான் மனிதனின் மனதைப் பண்படுத்தும் மார்க்கமாகிய வேதாத்தியத்தை அருளியுள்ளார் தவத்திரு. மகரிஷி அவர்கள்.

மனமும் உடலும் இணைந்துதான் செயல்படும் அதுதான் இயற்கை. மனம் மட்டும் தன்னிச்சையாக செயல்படாது. அதுபோல, உடல் இயக்கமே மனதில் தோன்றும் எண்ணங்களால்தான் நிகழ்கின்றது. உறுதியான உடலும், தூய்மையான மனமும் சேர்ந்து, ஆத்மாவைப் புனிதமாக்குகின்றது. அத்துடன் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தெய்வீகத்தை அவர்களுடைய செயலின் மூலமாக வெளியே கொண்டு வருகின்றது.

வளரிளம் பருவத்தினரை வழி நடத்திச் செம்மையான மனிதர்களாக உருவாக்குவதே கல்வியின் நோக்கம்.

ஆனால்  தற்போதைய  சூழ்நிலை யில் பள்ளிகள் மதிப் பெண்களை வாங்கவைப்பதிலேயே குறியாகச் செயல்படுகின்றன. கல்லூரி களோ, மாணவர்களை வேலைக்கு ஆய்த்த மாக்குவதிலேயே முழுமூச்சாக மூழ்கி விடுகின்றன.

“எங்கள் கல்லூரிக்கு வாருங்கள் நூறு சதம் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருகிறோம்“ என்ற விளம் பரங்கள் தினசரிகளில் முழுபக்கத்தில் வெளிவருவதைப் பார்க்க நேர்கின்றது.

ஏதாவது கல்லூரிகள், “எங்களிடம் வாருங்கள் முழுமனிதர்களாக மாற்றுகிறோம்!” என்று சொல்லுகின்றனவா? மனிதனுக்கு அறிவு இருந்தும் ஒழுக்கம் இல்லை என்றால், அவனால் சமுதாயத்திற்கு நன்மை எதுவும் விளையாது என்பதோடு அவனால் கணக்கில்லாத தீமைகளே நேரும்  என்பது உறுதி.

ஆகவே வளரிளம் பருவத்தினரை நெறிப்படுத்துவதற்காக, தவத்திரு. வேதாத்திரி மகரிஷி அவர்கள் தொடங்கிய உலக சமுதாயச் சேவா சங்கமும், பல்வேறு பல்கலைக்கழகங்களும் இணைந்து “ யோகாவும் இளைஞர் வல்லமையும்“ என்ற பட்டைய படிப்பை கல்வி நிலையங்களுக்குகே சென்று சொல்லிக் கொடுக்கின்றது.

சமீபத்தில், கோவை பாப்ப நாயக்கன்புதூர் மனவளக்கலை மன்றம் ஏற்பாடு செய்திருந்த தவத்திரு. வேதாத்திரி மகஷிரி அவர்களின் 107-வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக அருள்நிதி.யிசி.பன்னீர்செல்வமும், அன்புத்தம்பி தடாகம் சக்தி வடிவேல் அவர்களும் அழைத்திருந்தார்கள். சென்றேன்.

விழாவில் ஏராளமான குடும்பத் தலைவியர்கள் கலந்து கொண்டது பெருமைக்குரியதாகக் கருதுகிறேன்.

மனவளக்கலை மன்றத்தின் மூலமாக மனதையும் உடலையும், ஆன்மாவையும் சீரமைத்துச் செம்மைப்படுத்தும் பணியைச் சிறப்பாகச் செய்து வருகின்றார்கள். மனவளக்கலை மன்றம், எல்லா ஊர்களிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருவதை நான் நன்கு அறிவேன். நானும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன்.

“வாழ்க! வளமுடன், வாழ்க வையகம்“ என்று சொல்லும்போது மனதில் ஆனந்தம் பொங்கும். அதைவிட, அதை கேட்பவர்களின் உள்ளத்தில் உற்சாகம் ஒளிரத் தொடங்கும். எல்லோரையும் நல்ல மனதுடன் வாழ்த்தும்போது, அந்த வாழ்த்து பல மடங்காகப் பல்கிப் பெருகி நமக்கே வந்து சேரும். வாழ்த்தும்போதுதான் வளர்கிறோம். நல்ல வார்த்தை வாழவைக்கும்! நல்ல வாழ்த்து வளர வைக்கும்! என்பது உண்மைதான்.

வாழவும் வாழவைக்கவும் பிறந்தவர்கள் நாம். நாம் நன்றாக வாழ வேண்டும் என்றால் நம்மைச் சுற்றியும் ஆக்கப்பூர்வமான அதிர்வுகளை உருவாக்க வேண்டும். வாழ்க வளமுடன் என்று சொல்லும்போது, அருட்பேராற்றல் கருணையினால் எல்லா நலன்களும் வளமும் நம்மை வந்து சேர்வது உறுதி.

சும்மா இருந்தே வாழ்க்கைப் புத்தகத்தை கிழித்து வீசாமல் ஒய்வு நேரத்தில், அருகில் உள்ள மனவளக்கலை மன்றத்திற்கு செல்பவர்கள், நிச்சயம் நீண்டாயுள், நிறைசெல்வம், உயர்புகழ் பெறமுடியும் என உறுதியாகச் சொல்வேன்.