144 தடையை மீறி சாலையில் சுற்றுபவருக்கு போலீசார் விழிப்புணர்வு

கோவை 144 தடையை மீறி கோவை ஆத்துப்பாலம் பகுதியில் சாலையில் சுற்றும் நபர்களை, மனித விலகல் கட்டத்திற்கு நிற்க வைத்து போலீஸார் விழிப்புணர்வு வழங்கி அனுப்பி வருகின்றனர்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனாலும் அத்தியாவசிய தேவைகள் இன்றி சாலைகளில் சுற்றுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டது. மேலும் சாலையில் போலீஸ் சார்பாக மனித விலகல் கட்டங்கள் வரையப்பட்டது. காலை முதல் பொய்யான காரணங்கள் கூறி சாலைகளுக்கு வரும் நபர்களை பிடித்து மனித விலகல் கட்டத்தில் நிற்க வைக்கும் குனியமுத்தூர் போலீஸார், கொரோனா தொற்று குறித்தும், மனித விலகல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆத்துப்பலம் பகுதியில் குனியமுத்தூர் ஆய்வாளர் சக்திவேல் அங்கு தேவையின்றி சாலைக்கு வரும் மக்களிடம் பேசும் போது கொரோனா பரவலை தடுக்க அரசு மேற்கொள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும், மக்களை பாதுகாக்க மட்டுமே போலீஸார் சாலையில் வருவோரை அழைத்து பேச வேண்டிய சூழல் உள்ளது. எனவே மக்கள் ஒத்துழைத்து வீடுகளிலேயே இருக்க வேண்டும் என பேசினார்.