கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிகாரிகளுடன் ஆலோசனை

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இதில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் வேகப்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

ஆலோசனைக்கு பின்னர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றது என தெரிவித்தார். பிரதமர் அறிவித்த 21 நாட்கள் 144 தடை உத்திரவு அமலுக்கு வந்துள்ளது எனவும், அரசின் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் 314 பேர் தனிமை படுத்தப்பட்டு அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்த அவர்,
சார்ஜா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பகுதியில் இருந்து வருபவர்களை கண்காணிக்க 200 படுகைகள் கொண்ட கண்காணிப்பு மையம் கருமத்தம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது எனவும், இது வரை 546 பயணிகள் சோதனையிடப்பட்டு அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 540 படுக்கைகள் தயாராக இருக்கின்றது எனவும்
தனியார் மருத்துவமனைகளில் 100 படுக்கைகள் தயாராக இருக்கின்றது எனவும், தேவையான வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது எனவும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் கோவை மாவட்டத்தில் 8 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 240 படுகை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்த அவர்,
வாளையார் உட்பட 8 சோதனை சாவடிகளில் 39 மருத்துவ குழுக்கள் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் இருக்கின்றனர் எனவும் தெரிவித்தார். வீட்டில் தனிமைபடுத்த 314 நபர்களிடம் அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருகின்றனர் எனவும் தனிமைபடுத்தப்பட்ட 314 நபர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். கோவையில் இதுவரை கொரோனா அறிகுறி இருந்த 97 பேருக்கு சோதனை செய்யப்பட்டது எனவும், இதில் 73 பேருக்கு இல்லை என்பதும், 2 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 27 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு முடிவிற்காக இருக்கின்றனர் என கூறிய அவர், கொரோனா வைரஸ் குறித்து கோவை அரசு மருத்துவமனையிலேயே பரிசோதிக்கப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார். அனைத்து பேருந்து நிலையங்களிலும் கிருமிநாசினி தெளிக்க படுகின்றது எனவும், சிறைவாசிகள், மகளிர் சுய உதவிக்குழு மூலம் முக கவசம் தயாரிக்கபட்டு வருகின்றது எனவும், மக்கள் முழு கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும்
பொதுமக்கள் வீட்டிற்குள்ளே இருக்க வேண்டும், சுய கட்டுப்பாடு வேண்டும் எனவும் சிலர் அதை கடைபிடிக்காமல் இருக்கின்றனர் அதை பார்க்க முடிகின்றது எனவும் தெரிவித்தார். விட்டமின் சி உணவு வகைகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும் எனவும், நெல்லிக்காய், ஆரஞ்சு போன்றவற்றை சாப்பிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் அனைத்தும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், அதிக விலைகளில் பொருட்களை விற்க கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றது எனவும் தெரிவித்த அவர், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் சீரான முறையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.