சூர்யா நற்பணி மன்ற இயக்கம் சார்பாக கொரோனா விழிப்புணர்வு

கோவை மாவட்ட சூர்யா தலைமை நற்பணி மன்ற இயக்கம் சார்பாக கோவை காந்திபுரம்  பேருந்து நிலையத்தில் கொரானா வைரஸ் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் இலவச முக கவசங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகிறது. சில தனியார் அமைப்புகளும் சமூக ஆர்வலர்களும் நோய் தொற்றிடமிருந்து தற்காத்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூர்யா கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்த வீடியோ வெளியிட்டு பேசியதை தொடர்ந்து கோவை மாவட்ட சூர்யா தலைமை நற்பணி மன்ற இயக்கம் சார்பாக கோவை காந்திபுரம் உள்ளூர் பேருந்து நிலையத்தில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா ரசிகர்கள் அனைவரும் இணைந்து,

கொரோனா தொற்றுநோய் தாக்காதவாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும், அதற்கு எப்போதும் கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்களுக்கு இலவச முக கவசங்கள் வழங்கி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வழங்கினர்.

இது குறித்து கோவை மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற தலைவர் சுனில் பேசுகையில், நடிகர் சூர்யா கொரோனா  விழிப்புணர்வு குறித்து வீடியோ வெளியிட்டு பேசியுள்ளதாகவும், அவரது வேண்டுகோளுக்கிணங்க அவரது ரசிகர்கள் நாங்கள் இணைந்து கொரோனா விழிப்புணர்வு துண்டு பிரசுரம், கை கழுவும்போது சோப்பு கரைசல் பயன்படுத்துவது குறித்தும், முக கவசம் அணிய வலியுருத்தியும் பொதுமக்களிடையே விழிப்புணர் ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட சூர்யா ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் அஜூ, வடிவேல், இளவரசன், சதீஷ், அஸ்வத், ஆனந்த், கெகதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.