மூன்று மாநிலங்கள் தனிமைப்படுத்துவது குறித்து ஆலோசனை

மத்திய அரசின் பரிந்துரையின்படி, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை தனிமைப்படுத்துவது குறித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கொரோனா தொற்று உள்ளோர் அதிகம் உள்ள 75 மாவட்டங்களை மற்ற பகுதிகளில் இருந்து தனிமைப்படுத்தி மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.

இதில், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களை தனிமைப்படுத்த வேண்டும் என, மாநில அரசுக்கு மத்திய அரசு பரிந்துரைத்தது.

இது தொடர்பான முடிவு எடுப்பதற்காக, இன்று (மார்ச் 23) தலைமை செயலகத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூத்த அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும், சம்பந்தப்பட்ட மூன்று மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாகவும், முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். தனிமைப்படுத்தப்படுவதால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

நோய்த்தொற்று அதிகம் இருக்கக்கூடிய பகுதிகளைக் கண்டறிவது, மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு தங்கு தடையின்றி கிடைப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.