அரசியலில் ஓர் அதிசய மனிதர்

இந்திய அரசியல் தலைவர்களில் ஒவ்வொரு தலைவரும் ஒரு வகையில் தனிப்பட்ட குணநலன்களும், திறமைகளும் கொண்டவர்கள்தான். ஆனால் பொதுவாழ்வில் விழுமியங்களைக் கடைபிடித்து ஒரு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்கள் என்று சிலரை மட்டுமே குறிப்பிட முடியும். சொந்த நலனுக்காக பொது நலனில் ஈடுபடுதல், கட்சி தாவுதல், ஒரு குறிப்பிட்ட பிரிவை ஆதரித்தல், சுய லாபம், பதவி ஆசை என்று பலவற்றையும் ‘அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா’ என்று செய்துவரும் சில தலைவர்களிடையே ஒரு தனி விளக்காக மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக வழிகாட்டியாகத் திகழ்ந்தவர், திமுக கழகத்தின் மறைந்த பேராசிரியர் திரு.க.அன்பழகன்.

1940களில் அடிமை இந்தியாவில் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டு இளைஞர்கள் அரசியலில் பங்கெடுக்கத் தொடங்கியிருந்த நேரத்தில் காங்கிரஸ் பேரியக்கம், பொதுவுடமை இயக்கம் ஆகியவை மக்களிடையே செல்வாக்கு பெற்றுத் திகழ்ந்தது. அப்போது சுயமரியாதை இயக்கம் எனும் தமிழ் சார்ந்த சமூக நீதிக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியவர் க.அன்பழகன். அன்று தொடங்கிய பயணம் நெறி பிறழாமல் அவரது இறுதிக்காலம் வரை தொடர்ந்ததுதான் அவரது தனிப்பெருங்குணமாக தற்போது பார்க்கப்படுகிறது.

தனது தனித்துவமிக்க கருத்துச் செறிவான பேச்சால் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள், இளைஞர்களிடையே கட்சிக் கொள்கையை கொண்டு சென்று, அண்ணா, பெரியார் போன்ற தலைவர்களின் நன்மதிப்பையும், மரியாதையையும் பெற்ற, தேர்தல் அரசியலிலும் பங்குபெற்ற, எதிர்க்கட்சி, ஆளும் கட்சி, அமைச்சர் பதவி என்று அவரது பயணம் நெடியது. நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று காட்சிகள் மாறினாலும் தனது கொள்கையை மாற்றிக் கொள்ளாமல் மாற்றுக் கூடாரங்களை நாடாமல் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றவர் அன்பழகன் ஆவார்.

சிறந்த பேச்சாளர், மிகச்சிறந்த எழுத்தாளர். அவரது இளம் வயதிலேயே புதுவாழ்வு எனும் இதழையும் நடத்தி வந்தார். பொதுவாகவே அவரது எழுத்தும், பேச்சும் தமிழர் பண்பாடு சார்ந்து, அவர்களது முன்னேற்றம் சார்ந்தே இருந்தது குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எனது தனது ஜனநாயகப் பணிகளை சிறந்த முறையில் நிறைவேற்றியவர். எந்தவித ஆர்ப்பாட்டங்களும் இல்லாமல் தனது வாதங்களை எளிமையாக ஆனால் வலிமையாக எடுத்து வைக்கக்கூடிய வல்லமை வாய்ந்தவர். அவரது எழுத்தும், பேச்சும் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்காமல் கருத்துகளை தெரிவிப்பதாகவே கடைசி வரை இருந்தது இங்குள்ள தற்போதைய அரசியல்வாதிகள் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய அரும்பாடம்.

தமிழகத்தில் முதலில் மக்கள் நல்வாழ்வுத் துறை, பிறகு கல்வி, நிதி என்று பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்தவர். நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தபோது இந்தியாவின் அன்றைய மிக முக்கியமான முன்னேற்றத் திட்டமான குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை சீரிய முறையில் நிறைவேற்ற ஆவண செய்தவர். இதனைத் தனது அரசின் கொள்கை என்பதோடு தனிப்பட்ட விழாக்களிலும்கூட வலியுறுத்தியவர். அதைப்போலவே ஆங்கில மருத்துவம் எனும் அலோபதிக்கு நிகராக நமது பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவம் போன்றவை வளர்ந்து மக்களுக்கு பயன்தர வேண்டும் என பெருவிருப்பு கொண்டு அதற்காக செயலாற்றியவர். கல்வி மற்றும் நிதித் துறையிலும் பல்வேறு வரவேற்கத் தகுந்த மாற்றங்களைக் கொண்டுவரக் காரணமாக நின்றவர்.

எல்லாவற்றிற்கும் மேலாக தனது இளமைக்காலத்தில் திருவாரூரில் பள்ளி மாணவராக இருந்து தமிழ் மாணவர் மன்றக் கூட்டத்தை நடத்திய கருணாநிதி எனும் இளைஞருடன் கொண்ட தொடர்பும், நட்பும் இருவரையும் ஒரே லட்சியப் பாதையில் நடைபோட வைத்தது. ஒரு கட்டத்தில் அறிஞர் அண்ணாவுக்குப் பிறகு அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தபோது பல தலைவர்களுக்கும் பலவித விருப்பு வெறுப்புகள் இருந்தபோதும், கலைஞர் கருணாநிதிதான் ஏற்றுக்கொள்ளும் ஒரே தலைவர் என்று சொன்னதோடு, அதை செயலிலும் தனது வாழ்வின் இறுதிநாள் வரை கடைபிடித்து வாழ்ந்து காட்டிய பெருந்தகையாளர். குறிப்பாக 1970களில் கொண்டுவரப்பட்ட அவசரநிலைப் பிரகடனம், அதனைத் தொடர்ந்த ஆட்சிப் பறிப்பு, மற்ற அரசியல் நிகழ்வுகள் நடந்தேறியபோது கலைஞர் கருணாநிதியை கைவிட்டு நகர்ந்தவர்கள் பலர். அப்போதெல்லாம் தோள் கொடுக்கும் நண்பராக, கட்சியின் முக்கியத் தூணாக, விசுவாசமிக்க தளபதியாக உடன் நின்றவர் க.அன்பழகன்.

பலர் இவரை ‘நம்பர் டூ’ என்று கிண்டல் செய்த போதெல்லாம், அதற்காக சினங்கொள்ளாமல், ஆம், கலைஞர்தான் ஏற்றுக்கொண்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். அதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. இதில் தனது சுயநலனைவிட, எப்போதும் தமிழ் சமுதாயத்தின் நலனே முக்கியம் என்று பதில் உரைத்தவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக தனது உடல் நலனைப் பேணுவதில் அக்கறையுடையவராக இருந்து தொண்ணூறுகளைத் தாண்டி வாழ்ந்து நிறைவாழ்வு என்பதன் இலக்கணமாக வாழ்ந்து காட்டியவர். இன்றைய தலைமுறைக்கு அரசியல் விழுமியங்களை கடைபிடிப்பதன் அவசியத்தையும், அது ஒரு சாக்கடை அல்ல, சமூக சேவை செய்யும் வாய்ப்பு என்பதை தனது வாழ்வின் மூலம் நிரூபித்த மாமனிதர் க.அன்பழகன் என்றால் அது மிகையாகாது.