ஆசிரியர் தகுதிதேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

கோவை: ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) சார்பில் ஆசிரியர் தகுதி தேர்வு ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதற்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் கடந்த 6ம் தேதி துவங்கியது. கோவை மாவட்டத்தில் டெட் விண்ணப்பங்கள் விநியோகிக்க 24 பள்ளி மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கோவை மாநகரில் கிராஸ்கட் ரோடு, வெரைட்டிஹால் ரோடு, வரதராஜபுரம், அனுப்பர்பாளையம், சித்தாபுத்தூர் பெண்கள் என மாநகராட்சி பள்ளிகளில் விண்ணப்ப விநியோகம் நடந்து வருகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பம் விற்கப்பட்டு வருகிறது.

ஆசிரியர் தகுதி தேர்வு-1 விண்ணப்பம், ஆசிரியர் தகுதி தேர்வு -2 விண்ணப்பம் தலா ரூ.50க்கு விற்கப்படுகிறது.  ஒருவருக்கு ஒரு விண்ணப்பமும், இருதேர்வு எழுத விரும்பும் தேர்வர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு 1 மற்றும் 2 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் கடந்த 14ம் தேதி நிலவரப்படி 19,181 ஆசிரியர் தகுதிதேர்வு விண்ணப்பங்கள் விற்கப்பட்டுள்ளன. 5,364 பேர் விண்ணப்பங்களை சமர்பித்துள்ளனர். 49,619 விண்ணப்பம் கையிருப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை சமர்பிக்க நாளை கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, கோவை வின்சென்ட் சாலையில் உள்ள நல்லாயன் பள்ளியிலும், பொள்ளாச்சி மாவட்ட கல்வி அலுவலகத்திலும் விண்ணப்பங்களை சமர்பிக்க கூட்டம் அலைமோதி வருகிறது. விண்ணப்ப விநியோகம் துவங்கிய ஒருவாரத்தில், ஒருசிலர் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பித்து வந்தனர். தற்போது விண்ணப்பதாரர்கள் நீண்ட நெடிய வரிசையில் நின்று விண்ணப்பங்களை அலுவலர்களிடம் சமர்ப்பித்து வருகின்றனர்.  நாளை இறுதிநாள் என்பதால், இந்த கூட்டம் இன்றும், நாளையும் மேலும் அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.