பக்தர்களும்! கிறுக்கு புத்தியும்!

பக்தி என்பது இறைப்பொருளிடம் தன்னை ஒப்படைத்து, தனக்களித்த வாழ்விற்கும், பிறவிக்கும் நன்றிகூறி தியானிப்பது. அனைத்து கவலைகளையும் துன்பங்களையும் அனுபவிக்கும் வேளையில் ‘இறைவா, இந்த துன்பங்களை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தைக் கொடு’ என்று மனதை ஒருநிலைப்படுத்தி வேண்டுவது.

கோயில் என்றால் என்ன? பொதுவாக, ஏன், பிள்ளையாரை அரச மரத்தடியில் வைத்தார்கள்? நன்கு வளர்ந்த ஓர் அரச மரம், தினசரி 1,800 கிலோ கார்பன்— டை ஆக்சைடு வாயுவை உட்கிரகித்துக் கொண்டு, சுமார் 24 ஆயிரம் கிலோ பிராண வாயுவை வெளியிடுவதாக, தற்போதைய விஞ்ஞான உலகம் கூறுகிறது. இதை அன்றே உணர்ந்த நம் முப்பாட்டன் எத்தனையோ மரங்கள் இருக்க அரச மரத்தடியை கோயிலாக்கினான். ஆனால், நாம் வளர்ச்சி என்ற பெயரில் மரங்களை வெட்டுகிறோம். இதுதான் நமக்கும் நமது முன்னோர்களுக்கும் உள்ள வித்தியாசம். மனிதனின் பயத்தை ‘இறைவன்’ என்ற பெயரில் ஆக்க சக்தியாக மாற்ற முயற்சித்தனர் அவர்கள். அறிவியல்ரீதியாக விளக்கம் சொல்வதைவிட, இது கோயில், இறைவன் வாழும் இடம், இதைக் காப்பதும், அங்கே செல்வதும் கடமை என்றார்கள். வேறு கேள்வி கேட்காமல் சென்றவர்கள், நல்லதொரு ஆக்ஸிஜனைப் பெற்றார்கள். ஆனால் நாம் நாளை ஆக்ஸிஜனை விலைகொடுத்து வாங்க பணி செய்கிறோம்.

‘பிரம்ம முகூர்த்த வேளை’ எனும் அதிகாலை 4 முதல் 6 மணிக்குள் திருமணமான பெண்கள் அரச மரத்தைச் சுற்றிவந்தால், அவர்களின் கருப்பை வலுப்பெறும், கரு வலுவாகத் தங்கும். இதை நம்மவர் சொல்வதைவிட, நாளை யாரேனும் வெளிநாட்டவர் கண்டுபிடித்துச் சொல்லும்போது நாம் பெருமைகொள்வோம். அதுவரை இது மூடத்தனம். கடவுள் எங்கும் நிறைந்தவர். பிறகு கோயில் ஏன்?

பொதுவாக, எல்லா இடங்களிலும் கோயில் கட்டப்படுவது இல்லை. எல்லா கோயில்களுக்கும் சக்தியும் இல்லை. எங்கே இயற்கையிலேயே காந்த சக்தி, காந்தப்புள்ளி அதிகமாக வெளிப்படுகிறதோ, அங்கே அந்த சக்தியை வெளிக்கொண்டுவரும் வகையில் நல்லதொரு கல்லையும், அதன்மீது தாமிரம் அல்லது செம்புத்தகடு என ஏதேனும் ஒன்றை வைத்து, அதன்மீது ஓர் சிற்பத்தை ஏற்றி, அங்கிருந்து வெளிப்படும் ஆற்றலைக் கட்டுப்படுத்த கற்பகிரகம் எனும் கட்டுமானத்தை ஏற்படுத்தி, அந்தக் கட்டுமானத்தின் ஒருபகுதிக்கு மட்டும் கதவு வைத்து, ஆற்றலை வெளிப்படுத்த ஆயுத்தம் செய்தார்கள். பிறகு கொடிமரம் ஒன்றை வைத்து, அதை அந்த ஆற்றலுடன் இணைத்தார்கள். நீங்கள் மலைமீதுள்ள கோயில்களுக்கோ அல்லது பழைமையான கோயில்களுக்கோ செல்லும்போது உங்கள் உடலில் சிலிர்ப்பு ஏற்படுவதை உணர்வீர்கள். அந்த உணர்வு தான், காந்த ஆற்றல். அதுவே உங்கள் இதயத்திற்கும் உடலுக்கும் நன்மை பயக்கும் சக்தி. நோயில்லா வாழ்வுக்கு நம் முன்னோர் செய்த ஏற்பாடு.

கோபுர கலசங்களில் கும்பாபிஷேகத்தின் போது, நவதானி யங்கள் இடப்படும். நாம் விவசாயப் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். வௌ¢ளம் வந்து ஊரில் உள்ள அனைத்தையும் இழக்கும்போது, உயரத்தில் காக்கப்படும் இந்த கலசத்தில் இருந்து, மீண்டும் புதிதாக நம் வாழ்வாதாரம் தொடங்கப்படும். அத்துடன், இடியைத் தாங்கும் சக்தியாகவும் கோபுரம் விளங்குகிறது. ஆதலால்தான், ‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்றனர் நமது பெரியோர்கள். அத்துடன், கோயில்கள் ஒன்றே பல கலைகளின் இருப்பிடம். அரசர்களின் நீதி பரிபாலனையும் அங்கேதான் நடந்தது.

சரி. இன்று விவசாயம் இலாபமான தொழிலாக இல்லை. அனைத்தும் கணினி மையம். இப்போது இவ்வாறெல்லாம் பேசுவது வெறும் பிதற்றலாகத்தான் தெரியும். ஆதலால்தான், கோயில் என்பது சில காதலர்களுக்கு பூங்காவாகவும், சிலரின் கிறுக்கு புத்திக்கு கோயில் சுவர் வடிகாலாகவும் மாறிவிட்டது. அரும்பெரும் விஞ்ஞானம் அறியப்படாமல் உள்ளது. இவற்றையெல்லாம்விட, பேரதிர்ச்சி, சிதம்பரத்தின் ‘செருப்பு’ பக்தர்கள்!

சிதம்பரம் நடராஜர் கோயில் பல கலைச் சிறப்புகளைத் தன்னிடத்தில் கொண்டது. அங்கே ஓரிடத்தில் நின்று சிவனையும் பெருமாளையும் ஒரே நேரத்தில் தரிசிக்கலாம். அக்கோயிலில் சிவபெருமானின் தாண்டவம் நடைபெற்ற களத்தில் உள்ள சிற்பத்தூண்கள் மாபெரும் அற்புதம். ஆனால் தற்போது, அக்கோயிலுக்குள் வரும் பக்தர்கள், கைகளில் தங்களது செருப்புகளுடன் பிரகாரம் வரை உலா வருகிறார்கள். அரசாங்கம் ஏற்படுத்திய இலவச காலணியகங்களில் ‘விருப்பமிருந்தால்’ என்ற வார்த்தையுடன் அல்லது ‘குறிப்பிட்ட தொகை’ கட்டாயமாக வசூலிக்கப்படத்தான் செய்கிறது. ஆனால் இங்கே வாசலில் உள்ள சில தனியார் கடைகளில் கட்டணம் வசூலித்து செருப்பை பாதுகாக்கிறார்கள். இதுதான் இக்கோயிலின் வழக்கம் என்று கொடுத்துவிட்டு உள்ளே சென்றால், சிதம்பர பக்தர்கள் தங்கள் செருப்பை கைகளில் ஏந்திக்கொண்டு வலம்வருகின்றனர்.

எல்லாவற்றுக்கும் அரசாங்கம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமா? செருப்புதான் முக்கியமா? கோயில் என்பதன் அர்த்தம் புரியாமல், பக்தி என்பதன் நுணுக்கம் அறியாமல் இவ்வாறு நடப்பது நமக்குத்தான் அசிங்கம். இப்பழக்கம் தொடர்ந்தால், ‘ஓ, இதுதான் இக்கோயிலில் வழிபடும் முறையோ?’ என்று இதுவே வழக்கமாகிவிடும். திருந்துவது யார்? திருத்துவது யார்?

கோயிலுக்குச் செல்வது மனதை நேர்படுத்த, நிறைவுகாண. அங்கே உள்ள சிற்பங்களைத் தொடுவது தவறில்லை. ஆனால் சுவர்களில் தங்கள் பெயரை, குறியீடுகளை இடுவது மாபெரும் முட்டாள்தனம். உங்களால் ஓர் கோயிலைக் கட்ட இயலாது. ஆனால் கட்டிய கோயிலை, அதன் பாரம்பரியம் மாறாமல் காப்பாற்ற முடியும். ஆகவே, கோயிலுக்குச் செல்வது அவரவர் விருப்பம். செல்லும்போது அங்கே குறைகளை விட்டுவாருங்கள், கறைகளை ஏற்படுத்தாதீர்கள்.

  • கா.அருள்.