நூலகம் அறிவின் தாயகம்

அகத்தின் அழகு முகத்திலே, அறிவின் அழகு செயலிலே!. அகமும், முகமும் அழகாக மிளிர்வதற்கு உள்ளத்தில் அறிவும் அன்பும் ஒளிர வேண்டும். அறிவுடையார் எல்லாம் அறிவார். அதுபோல அன்புடையாரை எல்லோரும் அறிவார். அறிவு வளத்தை அள்ளித்தரும் நூல்களின் கருவூலம்தான் நூலகம். ஒரு நூலகத்தின் கதவு திறக்கப்படும்போது சிறைச்சாலையின் கதவு மூடப்படுகிறது என்பார்கள்.

சமீபத்தில் கோவை, காளப்பட்டி அரசு கிளை நூலகத்தின் பொன்விழாவில் கலந்து கொண்டு மகிழ்ந்தேன். நமது முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அவர்கள், தனக்குப் பிடித்த வேலை ஆசிரியர் பணி என்றார். அதுபோல எனக்குப் பிடித்த பணி நூலகர் பணி. உள்ளத்தின் மகிழ்வோடு ஞானிகளோடும், அறிஞர்களோடும் உரையாடி மகிழலாமல்லவா?

புத்தகம் என்பது வெறும் காகிதங்களின் கட்டு அல்ல. அடிமனதில் புதைந்து கிடக்கும் ஆற்றலைத் தூண்டி எடுக்கும் நெம்புகோல்கள். ஆகவே, நூலகம் செல்லும் பழக்கத்தை நமது குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். புத்தகம் வாசிப்பது ஆரம்பத்தில் கடினமாகத் தோன்றலாம். ஆனால் தொடர்ந்து வாசிக்கத்தொடங்கி விட்டால் போதும், அதை நிறுத்த முடியாது.

எல்லோராலும் புத்தகங்களை விலை கொடுத்து வாங்க முடியும் என்று சொல்லமுடியாது. அவ்வாறு ஒரு சிலரால் வாங்க முடிந்தாலும், எல்லாவற்றையும் அவர்களாலும் வாங்க முடியுமா? யோசித்துப் பாருங்கள்! எத்தனையோ அறிஞர்களின் கனவுகளும், அனுப வங்களும் நூல்களாக உருவாகியுள்ளன. வாசிக்க வாசிக்க வாழ்க்கையை நேசிக்கத் தொடங்கிவிடுவார்கள் வாசகர்கள்.

வாழ்க்கை  என்பது உணர்வு களாலும் கனவுகளாலும் உருவாக்கப் படுவது. உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்கும் கனவுகளை வளர்த்துக் கொள்வதற்கும் நூல்கள் துணை நிற்கின்றன. வாசிக்க நேரமில்லை  என்று சொல்பவர்கள், வளர்ச்சிக்கான கதவுகளை மூடிவிட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். ஒவ்வொரு நாளும் செடிவளர்வதைப் போல, நாமும் தினம் தினம் வளர்ந்து கொண் டே இருக்க விரும்பினால் வாசிப்பை தினசரி அட்டவணையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை எனக்கு ஏற்படுத்தியவர் புலவர் செ.பெரியசாமி அண்ணா அவர்கள் ஸ்ரீஇராமகிருஷ்ணா வித்யாலயா, சுவாமி சிவானந்தா மேனிலைப்பள்ளியில், நான் +2 பயின்று கொண்டிருந்தேன். அப்பொழுது பல்வேறு இலக்கியப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு என்னை ஊக்கப்படுத்தியவர் அவர்தான். திருக்குறள் ஒப்பிவித்தல், பேச்சுப் போட்டி, கட்டுரை எழுதுதல் என்று எனக்குள் ஆர்வ அக்னியைப் பற்ற வைத்தார். அப்பொழுது அதற்கான தயாரிப்புக்காக, எனது மூத்த சகோதரர் திரு.அரங்க கோபால் அவர்கள், வித்யாலயா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருடைய ஊக்குவிப்பு மற்றும் வழிகாட்டுதலின் பேரில், வித்யாலயா கலைஅறிவியல் கல்லூரியின் நூலகத்திற்கு மாலை வேலைகளில் செல்லத் தொடங்கினேன். விடுதி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் வித்யாலயா பொது நூலகம், இரவு 8 மணிவரை திறந்திருக்கும்.

வாசிக்க வாசிக்க வாசிப்பதில் ஆர்வம் ஏற்படத் தொடங்கியது. தொடர்ந்து செல்லத் தொடங்கினேன். நூலகத்திற்குச் செல்வதற்கு, எனது நண்பர்களை அழைத்தால் வரமாட்டார்கள். யாரும் வரவில்லை என்பதற்காக, நான் தொடர்ந்து செல்வதை ஒருநாளும் நிறுத்த வேண்டாம்  என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வது இன்னும் நெஞ்சில் ஈரமாகவே இருக்கிறது. பொதுநூலகத்தில், பல்வேறு ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்களிடம், வாசிப்பதற்கான ஆலோசனையும் அறிவுரையும் கிடைத்தது.

அவர்களில் எனது இதயத்தை கவர்ந்தவர் இருவர். ஒருவர் திரு.இராமகிருஷ்ணன் அண்ணா, இன்னொருவர் “தமிழமுதன்” என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதுவதிலும், சொற்பொழிவு நிகழ்த்துவதிலும் சிறந்து விளங்கிய பேராசிரியர் திரு.தியாகராஜன் அண்ணா. சில நேரங்களில் கவிதை எழுத முயற்ச்சித்து, அவற்றை திரு.தமிழமுதன் அவர்களிடம் காட்டிப் பாராட்டுப் பெற்றுள்ளேன்.

நூலகம் செல்வோர், ஒருநாளும் சோடை போவதில்லை. அறிவு வளத்தைத் தேடிச் செல்லும் ஒவ்வொருவரும் உயர்வது நிச்சயம்.

எனது, பட்டப் படிப்பை கோவை அரசு கலைக்கல்லூரியில் தொடர்ந்தேன். அங்கு, அப்பொழுதெல்லாம் வகுப்புகள் சரிவர நடக்காது. ஏதாவது காரணங் களை முன்வைத்து மாணவர்கள், வகுப்புகளைப் புறக்கணித்து விடுவார்கள். அதுபோன்ற சூழ்நிலையில் கோவை மாவட்ட மைய நூலகத்திற்குச் செல்லத் தொடங்கினேன். எனது வகுப்புத் தோழர் நாராயணசாமியும் என்னுடன் வருவார். முத்துமுத்தான தனது கையெழுத்தால் எனக்குக் குறிப்பெடுத்துத் தருவார். ஒருவாரத்தில் குறைந்தது நான்கு நாட்களாவது பொது நூலகத்திற்குச் சென்று விடுவோம்.

மேலும் மாலை நேரங்களில், கோவை டவுன்ஹாலில் உள்ள விக்டோரியா ஹாலின் மேல்தளத்தில் செயல்பட்டுவந்த நூலகத்திற்கு நான் சென்று படிப்பேன். எனது ஊரான கந்தேகவுண்டன் சாவடிக்கு (க.க.சாவடி) இரவு கடைசிப் பேருந்து இரவு பத்துமணிக்கு வரும். அதுவரை நூல்களைத் தேடித்தேடி வாசிப்பேன். வாசிப்பில் ஏற்பட்ட எனது ஆர்வம், என்னை எழுத்துலகத்திற்கு இழுத்துச் சென்றது.

நூலகம் மூலமாகத் தான் நான் வளர்ந்தேன். ஆகவே, நூலக விழாவில் கலந்து கொண்டது எனக்குப் பேரானந்தத்தைத் தந்தது. அவ்விழாவில் கலந்து கொண்ட மார்வெல் என்கான்டெக் பி லிட் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் திரு.ரவிச்சந்திரன் பெரும் நூலகப் பிரியர். அனைவருக்கும் எனது நூல்களை வழங்குவதில் மகிழ்பவர். அவரைப் போல நல்ல மனம் படைத்தவர்களால் நிகழ்காலம் மகிழும். எதிர்காலம் ஒளிரும். அவருக்கு எனது நன்றி.

காளப்பட்டி கிளை நூலக நூலகர் திரு.சரவணன், வாசகர் வட்டத் தலைவர் ஆசிரியர்  திரு.நடராஜன், கவிஞர் கோவை கோகுலன், கவிஞர் சிதம்பரநாதன் மற்றும் நூற்றுக்கணக்கான வாசகர்களும், பள்ளி மாணவ, மாணவியரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது முதுமொழி. நூலகம் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது புதுமொழி. சுழற்சங்கம், அரிமா சங்கம் போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் நூலகங்களைத் தத்தெடுத்து வாசிக்கும் பழக்கத்தை பள்ளி மாணவ, மாணவரிடையே  ஏற்படுத்தினால் அவர்களின் ஓய்வு நேரம் பயனுள்ளதாக அமைவதோடு, ஓளிமயமான எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமையும் என்பது உறுதி.

…மீண்டும் அடுத்த வாரம் சிந்திப்போம்.

  • கவிதாசன்.