ஊட்டச்சத்து குறைபாடு குறித்த இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சி துவக்கம்

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் சார்பில் ‘ஊட்டச்சத்து இருவார நிகழ்வு -2020’  குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் சார்பில் ‘ஊட்டச்சத்து இருவார நிகழ்வு-2020’ குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் மீனாட்சி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் குழந்தைகள், கர்ப்பிணிகள், வளரிளம் பெண்களின் ஊட்டச்சத்து பாதுகாப்புக் குறித்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. போஷான் அபியான் திட்டத்தின் கீழ், 2022க்குள் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நாடாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் ஒருபகுதியாக விழிப்புணர்வு நிகழ்ச்சியான போஷன் பக்வாடா (மார்ச் 8 முதல் 22 வரை) இருவார நிகழ்வு மேற்கொள்ளப்படுகிறது. ‘ஊட்டச்சத்திற்காக ஆண்கள் – ஊட்டச்சத்து குறியீடுகளை மேம்படுத்த ஊட்டச்சத்து திட்டத்தில் ஆண்களின் பங்களிப்பை அதிகரித்தல்’  என்பதே இதன் கருப்பொருளாகும். பெண்கள் குழந்தைகள் மட்டுமின்றி பெரும்பாலான வீடுகளில் முடிவெடுக்கும் இடத்தில் உள்ள ஆண்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் அளிப்பதை உறுதி செய்தல், தடுப்பூசி வழங்குதல், ஆறு மாத குழந்தைகளுக்கு துணை உணவு வழங்குதல், தன் சுத்தம் பேணுதல், இரத்த சோகை தடுத்தல், ஒவ்வொரு மாதமும் எடை மற்றும் உயரம் எடுத்தல், கருவுற்ற பெண் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து நிலையை உறுதி செய்தல் மற்றும் குழந்தை வளர்ப்பில் ஆண்களின் பங்களிப்பை உறுதி செய்தல் போன்ற நோக்கங்களை மையமாக கொண்டு இவ்விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இப்போஷான் பக்வாடா நிகழ்வின் ஒரு பகுதியான அனைத்து மக்களிடையே ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று ஊட்டச்சத்து பிரச்சார வாகனம் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாகனம் கோவை மாவட்டத்திலுள்ள ஆனைமலை, அன்னூர், பெரியநாயக்கன்பாளையம், பேரூர், செல்வபுரம், சிங்காநல்லூர், சாய்பாபாகாலனி, கணபதி, மதுக்கரை, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, சூலூர், சுல்தான்பேட்டை, சர்க்கார் சாமக்குளம் ஆகிய பகுதிகளில் இன்று முதல் மார்ச் 22 வரை ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் என்றார்.