கோவையில் கொரோனா இதுவரை இல்லை

– மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி

கொரோனா வைரஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது.

ப்ருக்பில்டு அருகிலுள்ள இந்திய மருத்துவ சங்க கலையரங்கத்தில் கொரோனா வைரஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தலைமையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் அசோகன், இணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) கிருஷ்ணா, இந்திய மருத்துவ சங்க செயலாளர் ரவிக்குமார், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆகியோர்களின் அறிவுரையின் படி கோவையில்  கொரோனா வைரஸ் தொடர்பான முன்னேச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை அரசு மருத்துவமனை ஈ.எஸ்.ஐ மருத்துவமனை மற்றும் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும்  நிலையங்களில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை வார்டுகளை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் கொரோனா வைரஸ் காய்ச்சலால் இதுவரை பாதிப்பு யாருக்கும் இல்லை. கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நோய் அறிகுறிகள்,  நோய் பரவமால் தடுக்கும் வழிமுறைகள், குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே சுகாதார துறை, மாநகராட்சி, பள்ளிக் கல்வித்துறை, ஆகிய துறைகள் மூலம் விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோவையில் மாவட்டத்தில் வைரஸ் பாதிப்பு இல்லாத சூழ்நிலை தொடர அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்தார்.