நேரு கலை கல்லூரியின் சார்பில் உலக மகளிர் தின விழா

35 சிறந்த பெண்மணிகளுக்கு விருது

கோயம்புத்தூர், மார்ச் 8, 2020 கோவை பாலக்காடு சாலையில் திருமலையாம்பாளையத்தில் அமைந்துள்ளது நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியின் சார்பில் இன்று (08.03.2020) உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேரு பெண்கள் சிறப்பு மையத்தின் சார்பில் சிறந்த 35 பெண்மணிகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு வந்திருந்தவர்களை நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர். பி. அனிருதன் வரவேற்று பேசினார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை நல்லறம் அறக்கட்டளையின் நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான திரு. எஸ். பி. அன்பரசன் அவர்கள் கலந்து கொண்டு சிறந்த பெண்மணிகளுக்கு விருதுகளை வழங்கி பேசியதாவது :- இன்று ஒரு அற்புதமான நாள். நமக்கு தாயாக, சகோதரியாக, தாரமாக, மகளாக உள்ள பெண்கள் மற்றும் அனைத்து மகளிருக்கும் இன்று நன்றி தெரிவிக்கும் நாள்.

களையும் எடுப்போம், கணினியும் செய்வோம், நெல்லையும் அறுப்போம் நேர்த்தியாய் ஆடையும் நெய்வோம், வயலுக்கு நீரும் இறைப்போம் வானில் விமானம் ஓட்டுவோம், அடுப்பையும் ஊதுவோம் நாங்கள் படிப்பையும் ஓதுவோம் என அனைத்து துறைகளிலும் இன்று சாதனை படைக்கும் நமது பெண்களை கண்டிப்பாக பாராட்டியே ஆகவேண்டும். தனக்கென்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னைச் சுற்றியிருப்பவர்களின் மகிழ்ச்சியே தங்களின் மகிழ்ச்சி என வாழ்ந்து கொண்டு இருக்கும் நமது பெண்கள் சிறப்பு பற்றி இன்று நாம் பேசியே ஆகவேண்டும். எந்த ஒரு நாடு பெண்களை போற்றுகின்றதோ அந்த நாடு செழிப்பாக வளரும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை. பெண்களின் சாதனைகளை போற்றும் விதமாக மற்றும் அவர்களை ஊக்குவிக்கும் இந்த சிறந்த பெண்களுக்கான விருது வழங்கும் விழாவை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான டாக்டர் பி. கிருஷ்ணகுமார் தலைமை வகித்து பேசியதாவது :- கோவை நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் கடந்த 2017ஆம் ஆண்டு பெண்கள் சிறப்பு மையத்தை துவக்கினோம். இதில் பெண்கள், மாணவிகள், கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெண்களுக்கு போட்டி நிறைந்த இந்த உலகில் போட்டியிட பல்வேறு சிறப்பு பயிற்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் வாழ்க்கை வழிகாட்டல், திட்டம் வகுத்தல் எனும் நோக்கில் இந்த மையம் துவக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் பயிற்சியளிக்கப்பட்டு வருகின்றது. இந்த மையத்தில் பெண்களின் வாழ்க்கை முறை மற்றும் சமூக நிலையை உணர்த்த பல்வேறு திட்டங்கள் உள்ளன. பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல்கள், பெண்கள் அதிகாரம் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்தல் போன்ற குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த 2020 ஆம் ஆண்டு நேரு சாதனைப்பெண் விருது நம்மைச் சுற்றியுள்ள உத்வேகம் தரும் பெண்களை விதமாக வழங்கப்படுகிறது. நேரு சாதனைப்பெண் விருது பெண்களை ஊக்குவிப்பதோடு அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் என்று நம்புகிறது. ஆனால் அவர்களின் திறனற்ற மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான அவர்தம் திறன்களையும் மேம்படுத்தும் என்று நம்புகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவிற்கு கௌரவ விருந்தினர்களாக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி டாக்டர் விமலா பேசும் போது :- ஒரு நாட்டின் நாகரீகத்தை அளக்க வேண்டும் என்றால் அந்நாட்டின் பெண்கள் எந்த அளவு நாகரீகமாக நடத்தப்படுகிறார்கள் என்பதை பொறுத்து அதனை மதிப்பிடலாம். பெண்கள் ஆணுக்கு நிகரானவர்கள் இல்லை, அவர்களை விட மேலானவர்கள் என வில்லியம் கோல்ட் என்ற ஆங்கில எழுத்தாளர் தெரிவித்துள்ளார். உடல் ஊனமுற்ற பெண்களுக்கு எப்பொழுதும் நான் என்னுடைய இலவச சட்ட ஆலோசனை வழங்குவேன். பெண்கள் தாயாக, தாரமாக பல்வேறு நிலைகளில் இருந்து அனைவருடைய வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கிறார்கள். பெண்கள் இந்திரா காந்தி, அன்னை தெரசா, ஜெயலலிதா போன்றவர்களைப் போல் அனைத்துத் துறைகளிலும் சிறப்பான நிலையை அடைய வேண்டும். பெண்கள் நீதிபதி போன்ற பெரிய பதவிகளை வகிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

கோயம்புத்தூர் ஸ்வர்க பவுண்டேஷன் நிறுவனரும் நிர்வாக அறங்காவலருமான . ஜே. ஸ்வர்ணலதா கலந்துகொண்டனர்.

விழா முடிவில் நேரு பெண்கள் மைய இயக்குனர் டாக்டர் எம்.கனகரத்தினம் நன்றி கூறினார்.