மலேசியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்கிறார் மொகைதீன் யாசின்

மலேசியா: மலேசியாவின் புதிய பிரதமராக மொகைதீன் யாசின் நாளை பொறுப்பேற்க உள்ளார். இதுவரை மலேசிய பிரதமராக இருந்த மகாதீர் முகமது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அரசியல் கட்சித் தலைவர்களை இன்று (பிப்ரவரி 29) சந்தித்த பிறகு, முகைதீன் யாசினை மலேசியாவின் அடுத்த பிரதமராக மலேசிய மாமன்னர் தேர்ந்தெடுத்துள்ளார்.

முகைதீன் யாசின் நாளை காலை 10.30 மணிக்கு நாட்டின் எட்டாவது பிரதமராகப் பதவியேற்பார் என இஸ்தானா நெகரா அறிவித்துள்ளது.

பிரதமர் பதவிக்கான பெரும்பான்மை ஆதரவுக்காக பக்கத்தான் ஹரப்பானுடன் மீண்டும் இணைய இடைக்காலப் பிரதமர் டாக்டர் மகாதீர் முடிவெடுத்த நிலையில் அரண்மனையிலிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

“அனைத்து கட்சித் தலைவர்களின் பிரதிநிதிகள், தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகு, பிபிபிஎம் கட்சியின் தலைவரான முகைதீன் யாசின் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாக மாமன்னர் ஊகிக்கிறார்,” என்று இன்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இஸ்தானா குறிப்பிட்டது.