“எதிர்காலத் தொழில்நுட்பம்” குறித்த கருத்தரங்கு

கோவை கண்ணம்பாளையத்தில் உள்ள கே.ஐ.டி – கலைஞர்கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தலைமையில் “எதிர்காலத் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை எதிர்பார்ப்புகள்” பற்றிய கருத்தரங்கம் கல்லூரி கலையரங்கத்தில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கல்வியாளர். ஜெயப்பிரகாஷ் காந்தி பேசுகையில், புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் (Artificial Intelligence,Industry 4.0,Machine Learning) நுட்பம் அனைத்தும் சமூக மேம்பாட்டுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்றும் குறிப்பாக மின்சாரத்துறை, சுகாதாரம், வேளாண்துறை உள்ளிட்டவற்றுக்கு பயன்படும் வகையில் இருக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், அவர் பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் நாம் அறிவியல் துறையில் அபரிவிதமான வளர்ச்சியை பெற்றுள்ளோம் அதற்கு காரணம் அறிவியல் துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு புதிய தொழில் நுட்பங்களின் மாற்றங்களே முக்கியக் காரணம். அதனால் தொழில்துறை வல்லுநர்கள் மாணவர்களின் கல்வி அறிவோடு, தொழில்நுட்பம் சார்ந்த தனித்துவமான திறமைகளையும் எதிர்பார்க்கின்றனர். ஆதலால் மாணவ-மாணவியர்கள் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்காக புதிய தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று  வலியுறுத்தினார். மேலும்  மாணவ-மாணவியர்கள் கல்வியறிவுடன் புதிய தொழில்நுட்பம் சார்ந்த தனித் திறமைகளையும் வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் கொள்ள வேண்டும் என்றும்  கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி துணைத்தலைவர் இந்து முருகேசன், கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.