பள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் – ஆளுநர் தொடங்கி வைத்தார்

அட்சய பாத்திரம் அறக்கட்டளை மூலம் கூடுதலாக 12,000 மாநகராட்சி பள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும், 5 ஆயிரம் மாணவர்களுக்கு, காலை உணவு வழங்கும் பணியை, அட்சய பாத்திரம் அறக்கட்டளை, கடந்த ஆண்டு பிப்ரவரியில் துவக்கியது. மேலும் 12,000 மாநகராட்சி பள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, சரோஜா, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள், பள்ளி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தான் முதலமைச்சராக பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெறும் இந்த நாளில், திட்டம் தொடங்கி வைக்கப்படுவதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார்.

பள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில் மேலும், 2 சமையல் கூடங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது என்றும், மின்இணைப்பு, குடிநீர் கட்டணங்களை மாநகராட்சியே செலுத்த அரசு முடிவு செய்துள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். ஆளுநர் 5 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளதற்கும் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.

 

Source : Polimer News