இந்த குழந்தைதான் உங்க குலவிளக்கு!

கொங்குச்சீமை செங்காற்று

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை

 

எழுங்க..! போகலாம்…” என்று செல்வராசு தன் அண்ணன் நமச்சிவாயத்தைக் கூப்பிட்டான்! அவனும் தட்டுத்தடுமாறி எழுந்து “ என்ன பொறப்படுலாமா..? என்றான்.

“அடுத்த தடவை வர்றப்போ மூணு பேருமாச் சேர்ந்து வாங்க! கெரயப்பத்திரம் முடிச்ச ஒடனே பணத்தை நீங்க ரெடிக்காசா வாங்கிக் கலாம்”

“ச்செரி ஆகுட்டும்!அப்படியே பண்ணிக்கலாம்”

அண்ணனும், தம்பியும் அங்கிருந்து அகன்றனர். இங்கே வரும் போதிருந்த மனநிலையை இவ்வளவு துரிதமாய் மாற்றமடையச் செய்து விட்டாளே! இந்தப் பொம்மனாட்டி மூலமா இன்னும் எவ்வாறெல்லாம் அண்ணன் மாறிக் கொண்டிருக்கிறானோ தெரிய வில்லையே! அண்ணி நாகரத்தினாளுக்கு இந்தச் சங்கதி யெல்லாம் தெரிஞ்சிருக்குமோ..” அவனுக்கு கால்கள் பின்னுவது போலிருந்தது. வீடு போய் விரைவிலேயே சேர்ந்து விட வேண்டும் எனவும்  தோணியது.

பிரசவவலி ஏற்பட்டுக் கண்ணாத்தாளை கோயமுத்தூர் பெரிய ஆஸ்பத்திரியில் கொண்டு போய்ச் சேர்த்தியிருந்தான் சுப்பைய்யன்! விடியற்காலமே வாடகை ஆட்டோ ஒன்றைப் பிடித்து அம்மாவையும் கூட்டிக்கொண்டுதான் சென்றான். பாப்பம் பட்டியில் இருந்து மாமியாரும், கொழுந்தியாவும் இங்கே வந்து தெரிந்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு அவசரமாய்  ஓடினார்கள்!

அரசமரத்து மேடையில் இருந்த பிள்ளையாரை சூடம் பற்றி வணங்கி, திருநீரை, நெற்றியில் இட்டுக்கொண்டு போகச் சொல்லி பொன்னுத்தாயி ஆசி கூறினாள்.

“அவளுக்குக் கொழந்தை பொறந்து தீர்க்காயுசாப் பொழைக்க வேணும்..! ஆண்டவன் தொணையிருப்பான் “ என பக்கத்து வீட்டாரெல்லாம் தைரியம் சொன்னார்கள்.

செல்வராசுவின் கல்யாணம் கூடச் சற்றுத் தள்ளிப்போகும் போலத் தெரிந்தது.

நமச்சிவாயத்துக்குத்தான் தூக்கம் வராமல் அவதிப்படுத்தியது. அப்படியே கொஞ்சமாய் வந்தாலும் கூட இடையிடையே கனவுகள் வேறு வந்து உபத்திரவங்கள் பண்ணின.

காடுகளை வாங்கும் தரகர்கள் அவனைச் சுற்றிலும் நின்று கொண்டு கும்மியடித்துப் பாடுவது போல் இம்சையாய் இருந்தது.

“கண்ணாத்தாளைப் பார்க்க நீங்க எப்பப் போறீங்கமாமா?  நாங்களும் வரோணும்”

“சாயங்காலம் நாலு மணிக்கு மேலதானெ பிரசவ வார்டுல உள்ளெ போக அனுமதிப்பாங்க! இல்லெ… வெடியாலயே  போகறதுனாலும் செரிங்க” என காலையில் வந்து அடுத்த வீட்டுப் பெண்கள் கேட்டபடியிருந்தனர்.

நமச்சிவாயம், நாகரத்தினத்திடம் கேட்டுக்கொள்ளச் சொல்லிவிட்டு, கோவைப்புதூர்ப் பக்கம் போகவர இருந்தான்.

“ போனப்போவுது! உங்குளுக்கென்ன ஆஸ்பத்திரிக்குத் தடமா தெரியாது? எத்தான பஸ்சுக இல்லெ”

எனும் நாகரத்தினத்தின் பதில் தான் அவர்களுக்குச் சற்று முரண்பாடாக இருந்தது.

“இந்த அக்காகிட்டெப் போயி கேட்டோம் பாரு!”

எனச் சங்கடம் தான் உண்டானது.

மாசய்யன் , மனம் கேட்காமல்…பஸ் ஸ்டேண்டில் போய் உட்கார்ந்து கொண்டு “ ஆஸ்பத்திரிக்குப் போனவர்கள் யாராவது வருகிறார்களா?” எனும் எதிர்ப்பார்ப்பில் இருந்தார்..!

தெற்கு மலையில் இருந்த அய்யாசாமியையும், வடமேற்கில் இருந்த மருதமலை முருகனையும் அவரின் உள்ளம் சதா வேண்டிக் கொண்டிருந்தது. இதே நிலையில்தான் சுப்பையனும் இருந்தான்.

வேடபட்டிப் பக்கம் ஆட்டுக்கிடை போடுவதற்குப் போன போது கூட, மருதமலைக்குச் சென்று” வரங்குடுத்து எங்க வம்சத்தைக் காப்பாத்தி, விருத்தி பண்ணய்யா” என்று ஆண்டவனைக் கும்பிட்டு வந்ததையும் நினைத்துக் கொண்டான்.

வெயில் தணிந்து, பொழுது குளிரும் வேளையில் சுகப்பிரசவம் ஆகி, பெண் குழந்தை பிறந்திருக்கும் தகவல் எட்டியது.

“..பேத்தி எடுக்கிறதுக்கு இத்தனை நாளாக நீங்க காத்திருந்தீங்க! உங்க ஆசைக்குத் தகுந்தாப்ல பொண் கொழந்தையே கெடச்சிருக்குது! கொல வௌக்காட்ட மாத் தெரியிது! உங்க எனத்தைப் பெருக வெய்க்கத் தலை நாளுல வந்த புள்ளெ இது! உங்களுக்கு பொட்டப்புள்ளெ இல்லேங்குற கொறை இப்பத்தீந்து போச்சல்லொ…” அய்யன் மாசய்யனும், அம்மா  முருகம்மாளும்  மகிழ்ச்சிப்படும் படியாக வருவோர், போவோரெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தனர்.

“ கண்ணாத்தா மக பொறந்த யோகத்துலயாச்சும் நாகரத்தினாளுக்கும்… மேலைக்குக் கொழந்தை பாக்கியம் கெடைக்கட்டும்”

“கெடைக்கிறதெல்லாம் கெடை க்கும்! என்ன நாளுதா கடந்துட்டே போவுது”

‘எளையவனுக்கும் முடிச்சு வெச்சு அவனெயும் ஊடும்,குடியுமாப்பண்ணி வுட்டுப் போட்டீங்கனா அவன் நல்ல மொறையில பொழச்சுக்குவானுங்க”

உற்றார் உறவினர்களின் அபிப்ராயங்களும், ஆர்வங்களும் ஒன்றாகிக் கலகலப்பாக ஒலித்தன.

சுப்பையனுக்கு” இந்த வீட்டில் இனி மேலாவது ஒற்றுமை உண்டாகி அது நிலைபேறானால் நன்றாயிருக்கும்’ எனும் மனநிலைதான் ஏற்பட்டிருந்தது

பொன்னுத்தாயி காலமாகிவிட் டாள்..!

“கடசிவெரைக்கும் சின்னநடுக்க முங்கூட இல்லெ! மணிமணியாப் பேசீட்டிருந்தாளுங்க! ஆத்தா இத்த னெசுடியாப் போகும்னு ஒருத்தருக்கும் தெரியாதுங்க”

“கண்ணாத்தாளுக்குக் கொழந்தை பொறந்தகாரியத்தெ அந்தஆத்தா பார்க்க முடியிலெ! பாவம் பொறப்பட்டுப் போயிடுச்சு…”

“ச்செரி! ஆயுசு அவ்வளவுதான்! சாவு நல்ல சாவு..! இந்த ஊருக்குள்ளயே மீறுன வயசு அவிகளுக்குத்தான். என்னெ விடவெல்லாம் இருபது, இருபத்தியஞ்சு வயிசுகூடுதலாத்தான் இருக்கோணும்” மற்றவர்களிடம் அனுதாபத்தோடு சொல்லிக் கொண்டிருந்தார் கதர்வேட்டி அய்யன்.

“ஊருக்கு ஒரு ‘வரவு’ வந்துச்சுன்னா ஒரு செலவு’ம் சீக்கிரமே ஆயிருது பாருங்க! பொறப்புங்கிறது வரவுதானுங்க! இறப்புங்குறது செலவு இல்லீங்களா?”அவரது கண்களில் சுரந்த கண்ணீர்த்துளிகளில் மகிழ்வும், வருத்தமும் கலந்தே இருந்ததைச் சுற்றியிருந்தவர்களால் எண்ணிப் பார்க்க முடிந்தது.

(தொடரும்)…

– சூர்யகாந்தன்