உலகத் திறன் போட்டிகளுக்கு முன்னோட்டமாக மாவட்ட திறன் போட்டிகள்

1950 முதல் உலகத் திறன் போட்டிகள் இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை உலக அளவில் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இணையாக நடத்தப்பட்டு வருகிறது. உலகத்திறன் போட்டிகள் உயர்ந்த செயல்திறன் மற்றும் தொழில்சார்ந்த சிறப்பு ஆகியவற்றின் அளவுகோலாக கருதப்படுகிறது. ‘மரம் வளர்த்து மழை பெறுவோம்: திறன் வளர்த்து உலகை வெல்வோம்’ என உலக திறன் போட்டிகளில் கலந்து கொண்டு நம் இளைஞர்களின் திறனை உலக அளவில் வெளிச்சத்திற்கு கொண்டுவர, இந்திய அளவிலும், தமிழக அளவிலும் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கட்டுமானம் மற்றும் கட்டமைப்பு தொழில்நுட்பம், தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து, உற்பத்தி மற்றும் பொறியியல் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு தொழில்நுட்பம், கலைப் படைப்புகள் மற்றும் அலங்காரம், சமூக மற்றும் தனிப்பட்ட சேவை ஆகிய துறைகளில் சிறப்பான திறன் படைத்தோரை தேர்வு செய்திடவும், திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திறன் போட்டிகள் நடத்தப்படுகிறது.

2021-ல் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற உள்ள உலகத் திறன் போட்டிகளுக்கு முன்னோட்டமாக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் ஆகியன இணைந்து ஜனவரி 23 முதல் ஜனவரி 31 வரை பல்வேறு மையங்களில் மாவட்ட அளவிலான திறனாளர்கள் தேர்வு செய்யும் மாவட்ட திறன் போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்தப் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றியாளர்கள் அடுத்து மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேடுப்பார்கள். அந்த போட்டிகளில் வெல்லும் வெற்றியாளர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளிலும் பின்னர் உலகத் திறன் போட்டிகளிலும் பங்கெடுப்பார்கள்.

கோவை மாவட்டத்தில், 32 பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் நூற்றுக்கு மேற்ப்பட்டோர் பங்கேற்றர். இந்த 32 பிரிவுகளில் முதல் இரண்டு வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ்களையும், இந்தப் போட்டிகளை சிறப்பாக நடத்திக் கொடுத்த நிறுவனங்களுக்கும், கமிட்டி உறுப்பினர்களும் நற்சான்றிதழ்களையும் வழங்கி, வெற்றியாளர்கள் அடுத்தடுத்த நடைபெறும் போட்டிகளிலும்; வெற்றிகளை பெற்று கோவை மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி வாழ்த்தினார். மேலும் இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் ஆர்.டி.ராஜேஸ்வடரி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணை இயக்குநர் லதா, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் டி.செல்வராஜன் மற்றும்  பலர் கலந்து கொண்டனர்.