அறம் காப்பாற்றப்படுமா?!

நடப்பது ‘கலிகாலம்’ என்பதும், ‘காலம் கெட்டுப்போச்சு’ என்பதும் பொதுவாக மூத்தவர்கள் அடிக்கடி உதிர்க்கும் மனக்குமுறல்கள். பனிக்காலம் வந்துவிட்டால் இருமல் வருவதுபோல, மூத்தவர்களை பெரிசு என்றும் அவர்கள் கூறுவதை உதவா தத்துவம் என்றும் இன்றைய தலைமுறையினர் சொல்கின்றனர். பலரும் அவர்களை வார்த்தைகளை காற்றோடு விட்டுவிடுகிறார்கள். ஆனால் நாம் நமது வாழ்வின் விழுமியங்களை, மதிப்பீடுகளை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறோம் என்பதுதான் இந்த கலிகாலம் என்பதன் அர்த்தம்.

பெருகிவரும் அநாகரிகங்கள், தாம்பத்யம் தொடங்கி, தாய் மகன், அண்ணன் தம்பி, ஆசிரியர் மாணவர் உறவு வரை சீர்குலைந்து வரும் மனித மாண்புகள், கொடுமைப்படுத்தப்படும் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, குறைந்தபட்ச பொறுப்புணர்வுகூட பெருவாரியான மக்களிடம் இல்லாமை, நியாயமற்ற வணிகம், நம்பியவரை ஏமாற்றுதல், நமக்கென்ன என்ற மனோபாவம், எல்லாவற்றுக்கும் மேலாக ‘தவறு என்று தெரிந்தும் அதை நியாயப்படுத்த முயற்சி செய்தல்’ ஆகியன தற்போதைய சமுதாயத்தில் பல்கிப்பெருகி தழைத்தோங்கி வளர்ந்து மரமாகி அடர்ந்த காடாகி நிற்கின்றது.

அதற்கு ஓர் அற்புதமான எடுத்துக்காட்டுதான் தற்போது அரசுப் பணிகளுக்காக நடந்துள்ள ஊழல் ஆகும். கோடிக்கணக்கான பேர் வேலையில்லாத நிலையில் படித்துவிட்டு நாட்டுக்கும் வீட்டுக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்ற நியாயமான உணர்வுடன் எத்தனையோ கசப்புகளை விழுங்கிக் கொண்டு, எப்படியாவது ஒரு வேலையைத் பெற்றுவிட வேண்டும் என அலையும் இளைஞர் கூட்டம் இந்த நாட்டில் ஏராளமாக உண்டு. கல்லூரியில் படிப்பதைவிட அதிகமாக கண் விழித்து கஷ்டப்பட்டு தேர்வு எழுதி எப்படியாவது ஒரு அரசு வேலையைப் பெற்று விடலாம் என்று கனவு காண்பவர்கள் என்று ஒரு வகை உண்டு. அவர்கள் தங்களது அம்மா நகை தொடங்கி அண்டா, குண்டா வரை அடகு வைத்து இதற்கென்று நடத்தப்படும் கல்வி நிலையங்களில் சேர்ந்து மந்திரித்துவிட்ட கோழி மாதிரி படித்துவிட்டு உருப்போட்டு தேர்வு எழுத வருவார்கள்.

அப்படி தேர்வு எழுதும் இலட்சக்கணக்கான பேர்களில் புண்ணியம் செய்த ஒரு சில பேருக்கு மட்டும் எப்படியோ அதிர்ஷ்ட தேவதை வெற்றியைத் தரும் மேஜிக் பேனாவை வழங்கி இருக்கிறாள். அவர்கள் அனைவரும் அரசு வேலை கிடைப்பதற்கு அந்த மேஜிக் பேனா உதவி இருக்கிறது. தேர்வு எழுதிய மற்ற பாவிகள் எல்லாம் வருத்தப்பட்டு பாரஞ்சுமப்பவர்களாக மாற வேண்டி இருக்கிறது.

இப்படி எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த நேரத்தில்தான் மேஜிக் பேனாவை வழங்கியது அதிர்ஷ்ட தேவதை அல்ல; அக்கிரமக்காரர்கள், அநியாயம் செய்யும் ஊழல்வாதிகள் என்ற தகவல்கள் செய்தியாக வந்து மக்களை அதிரச்செய்திருக்கிறது. அது தொடர்பாக தேர்வாணையப் பணியாளர் தொடங்கி, தெருவில் இருக்கும் தரகர் வரை கைது செய்யப்பட்டு காவல் துறையின் விசாரணை நடந்து வருகிறது. முதல்கட்டமாக, மேஜிக் பேனாவால் தேர்வு எழுதிய புண்ணியவான்கள் அனைவரும் அரசுத்தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது. கண்டிப்பாக சட்டம் தனது கடமையைச் செய்யும்.

ஆனால் இது போதுமா?

சட்டப்படி கொடுக்கப்படும் சில ஆண்டுகள் தண்டனையும், சில ஆயிரங்கள் அபராதமும் இந்த கொடுஞ்செயலுக்கு பரிகாரமாகி விடுமா? அடுத்து இதுபோல நடக்கத் துணியும் குற்றவாளிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இதுபோன்ற நடைமுறைகள் அமையுமா என்றால் நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் விதவிதமான இலட்சக்கணக்கான குற்றங்கள் நடக்கும் நம் நாட்டில் இவை எல்லாம் நாளைய செய்தி வெள்ளத்தில் மூழ்கப்போகும் ஓட்டைப்படகாகவே காட்சி தருகின்றன.

இதில் அரசையோ, சட்டத்தையோவிட தனி மனிதர்களின் கேடு கெட்ட நடத்தைதான் நமக்கு வேதனையை அதிகமாக்குகிறது. இலட்சக்கணக்கான பேர் உடல் நோக, உயிர் நோக கஷ்டப்பட்டு படித்துத் தேர்வு எழுதும் ஒரு போட்டித் தேர்வில், ஓடவே இயலாத நொண்டிக் கழுதைகள் இப்படி சந்தடி சாக்கில் வெற்றி பெற நினைப்பது எந்த வகையில் நியாயம்? காசு இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் என்ற ஆணவமா அல்லது அவ்வளவு கீழ்த்தரமாக மக்களையும் சட்டத்தையும் எண்ணிக்கொண்டு செய்யும் கிரிமினல்தனமா?

கோடிக்கணக்கான அப்பாவிகளை, அரசின் சட்ட திட்டங்களை, நடைமுறைகளை நம்பி கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று எண்ணும் நல்லவர்களை ஏமாற்றும், கீழ்மைப்படுத்தும் உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது?

இதுபோன்ற கயமைத்தனமான சிந்தனை உள்ளவர்கள் நமது சமூகத்தின் கரும்புள்ளிகள். ஒன்றுமே அறியாத படிப்பறிவோ, பண வசதியோ இல்லாத நிலையிலும்கூட தன்னால் இயன்ற உழைப்பை வழங்கி தன்னையும், தன் குடும்பத்தையும் காப்பாற்ற எண்ணும் சாதாரண மனிதர்கள் கோடிக்கணக்கான பேர் உள்ள நாட்டில் இதுபோன்ற மேஜிக் வீரர்களுக்கு மதிப்பே தரக்கூடாது.

மனசாட்சி உள்ள வழக்குரைஞர்கள் இவர்களுக்காக வாதாட முன்வரக் கூடாது. தெரியாமல் உணர்ச்சிவசப்பட்டு பிறகு வருந்தும் ஒரு கொலையாளிக்குக்கூட வழக்காட வரலாம். ஆனால் இதுபோன்று திட்டமிட்டு, சமூகத்தின் மனசாட்சியை படுகொலை செய்யத் துடிக்கும் குற்ற மனப்பான்மை உள்ளவர்கள் சமூகத்தால் தகுந்த விதத்தில் தண்டிக்கப்படுவதன் மூலமே எதிர்காலத்தில் நம் மக்களுக்கு மக்களாட்சி மீதும், மனசாட்சி மீதும் நம்பிக்கையை உருவாக்கும்.

தான் ஆராயாமல் வழங்கிய தீர்ப்பு தவறு என்று அறிந்ததும், அதற்காக தனது உயிரையே தந்த மன்னனை, அறத்தின் வழியில் நின்றவனை தந்த நாடு தமிழ்நாடு. இந்த விஷயத்திலும் அறம் காப்பாற்றப்பட வேண்டும்.