உன்னை நீ அறிவாய்

சிலர் தோல்வியைக் கண்டால் துவண்டு விடுவர், வெற்றிக்கும் தோல்விக்கும் என்ன வித்தியாசம்? – வெற்றி உன்னை வெளி உலகிற்கு அடையாளம் காட்டுகிறது. தோல்வியே உன்னை உனக்கே அடையாளம் காட்டுகிறது. கவிதாசன் வெற்றி அடைந்தால் கவிதாசன் யார் என்று இந்த உலகத்திற்குத் தெரியும், கவிதாசன் தோற்றுப் போனால் கவிதாசன் யார் என்று எனக்குத்தான் தெரியும். ஆகவே, வெற்றியைவிட தோல்வியே நல்லது. எடுத்த எடுப்பிலேயே வெற்றி அடைந்தால் அந்த வெற்றியின் சுவை உங்களுக்குப் புரியாது. சோதனைகள் இல்லாமல் வென்றால் அது சாதனை ஆகாது.

ஒரு கால்பந்தாட்ட விளையாட்டு, காலையிலே மைதானத்தில் யாருமில்லை, அங்கே நான் போய் நூறு கோல் அடித்துவிட்டேன் என்று பெருமையாக பேச முடியுமா? அதுபோல சோதனைகளைக் கடந்து வென்றால்தான் அது சாதனையாகும். தோல்விகளில் துவண்டுபோகக் கூடாது – சின்ன சின்ன அதிர்வுகளைக்கூட தாங்கமுடியாத பொத்தல் குடிசையாக மனம் இருக்கக் கூடாது. இடியைக் கூடத் தாங்கக்கூடிய இரும்புக் கோட்டையாக உங்களுடைய மனதை மாற்றுங்கள்.

தோல்வி நிகழாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்காமல், ஏன் தோல்வி அடைந்தோம் என்று பார்க்க வேண்டும். வெற்றி பெற்றால் பணிவு அவசியம். தோல்வி அடைந்தால் பொறுமை அவசியம். எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம். எது வந்தாலும் நம்பிக்கை அவசியம். ஆகவே, வெற்றியாளர்களைப் பாருங்கள், அவர்கள் தோல்விகளை எல்லாம் பாடங்களாக, ஆய்வுக் கூடங்களாக மாற்றிக்கொண்டு வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

எல்லோரும் தோற்றவர்கள்தான் – யாராவது தோல்வி அடையாமல் நான் வெற்றி அடைந்தேன் என்று சொன்னால் அது உண்மையல்ல. கவிதாசனாகிய நானும் பலமுறை தோற்று இருக்கிறேன். ஒரு வேப்பஞ்செடி வருகிறது, அதனுடைய கொழுந்தைக் கிள்ளினால் என்னைக் கிள்ளிவிட்டார்கள் என்று செத்துவிடுகின்றதா? ஒரு கொழுந்தைக் கிள்ளினால் அது பல குருத்துக்களோடு வளர்கின்றது.

உங்களைப் பார்த்து யாரும் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று சொன்னால், நீங்கள் அவர்கள் மீது கோபப்படக்கூடாது. மாறாக, உங்கள் மீதே கோபப்பட வேண்டும். இவர்களெல்லாம் சொல்லுகிற அளவிற்கு நான் தரத்திலே தாழ்ந்துபோய் கிடக்கிறேனே என்று உங்கள் மீதே கோபப்பட்டு ஒரு எரிமலையாக வெடித்து எழ வேண்டும். அவமானப்படுகின்ற போதெல்லாம் ஒரு அவதாரம் எடுங்கள். விழுகிற போதெல்லாம் ஒரு விஸ்வரூபம் எடுங்கள். புண்படுகின்ற போதெல்லாம், ஒரு புன்னகை செய்யுங்கள்.. இதுதான் வெற்றியின் ரகசியம். தோல்வியைப் பாட நூலாக்குங்கள், அந்தத் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள். எந்தத் தோல்விக்குள்ளும் ஒரு திருப்புமுனை இருக்கும், தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு திருப்புமுனை. “Failure is not an it is only a turning point” உங்களை மாற்றும். அப்படித்தான் பல இடங்களில் நடந்திருக்கிறது.

டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் விமானப்படையில் சேர வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் கிடைக்கவில்லை. அதனால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலே சேர்ந்தார். அதன் மூலமாக அவரின் வாழ்க்கை மாறியது. இந்த தேசத்தின் குடியரசுத் தலைவராக உயர்ந்தார். ஆகவே, இப்படி நடந்துவிட்டது என்று வருத்தப்படாதே, வீழாமல் இருப்பதல்ல வெற்றி, வீழும்போது எழுவதுதான் வெற்றி, வீழும்போது எழுவது மட்டுமல்ல வெற்றி, ஏற்கெனவே வீழ்ந்து கிடக்கின்ற இந்த சமுதாயத்தைத் தூக்கிக் கொண்டு எழுவதுதான் வெற்றி. அத்தகைய வெற்றிக்கு உங்களைத் தயார்படுத்துங்கள். உங்களுக்கு கை கொடுக்க யாருமில்லையே என்று எதற்காக கவலைப்படுகிறீர்கள்? ஏன் இருக்கிறது உங்களுக்கு இரண்டு கைகள் என்று சொன்னார் ஒரு கவிஞர். உன்னை நீயே பாராட்டு, உன்னை நீயே ஊக்கப்படுத்து.

ஆக, “நாமே நமக்குத் துணையானால் நாடும் பொழுதும் நற்புகழும் தாமே உன்னை தேடிவரும். சற்றும் இதற்கோர் ஐயமுண்டா” என்றார் கவிஞர் தேசிக விநாயகம் பிள்ளை. ஆகவே, தோல்வி நடக்கிறபோது நீங்கள் துவண்டு விடாதீர்கள். மூலையிலே கிடந்து முடங்கி விடாதீர்கள். எழுச்சியோடு வாருங்கள், தோல்வி என்பது அவமானமல்ல. அந்தப் போட்டியில் கலந்து கொள்ளாமல் இருப்பதுதான் அவமானம். ஓட்டப் பந்தயத்தில் எத்தனைப் பேருக்குப் பரிசு கொடுக்கிறார்கள். முதல் மூன்று பேருக்குத்தான். அப்பொழுது எதற்காக மூவாயிரம் பேர் ஓடுகிறார்கள். அதுபோலத்தான் உங்களுடைய முயற்சிகள் தோற்கலாம். முயற்சி செய்வதில் ஒருபோதும் தோற்றுவிடாதீர்கள். முயற்சிக்கு முயற்சி முன்னேற்றத்தைக் காட்டினால் நீங்கள் வெற்றிபெற முடியும். ஆகவே, தோல்வி நல்லது. அந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாமல் இருப்பதுதான் தவறு. வீழ்வதில் தவறில்லை, வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு.

நீங்கள் பலமுறை தோல்வியுற்றால், நீங்கள் ஒரு அனுபவசாலியாகி விடுவார்கள். அடுத்தவர்களின் பக்குவத்தை பெற்றுவிடுவீர்கள். ஆகவே, உங்கள் வாழ்க்கையை தோல்வியிலிருந்து தொடங்குங்கள்.

நேற்று என்பது உடைந்த பானை,

நாளை என்பது மதில் மேல் பூனை,

இன்று என்பது உன் கையில் உள்ள வீணை!