நெல்லையப்பர் கோவிலில் லட்ச தீப விழா

நெல்லை: தமிழகத்தில் முதன்முறையாக நெல்லையப்பர் கோயிலில் புதுமையான தீபங்களுடன் பக்தர்களை பரவசமூட்டும் வகையில் லட்ச தீப விழா நாளை (24ம் தேதி) நடக்கிறது. நெல்லுக்கு வேலியிட்டு காத்து ‘திருநெல்வேலி’ பெயர் வர காரணமாக அமைந்த திருவிளையாடல் நடைபெற்ற பிரசித்திபெற்ற தலமான காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோயிலில் 1864ம் ஆண்டு கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளால் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் பத்ரதீப விழாவும், ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை லட்ச தீப திருவிழாவும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டுக்கான லட்சதீப விழா கடந்த 13ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதையொட்டி 11 நாட்கள் (24ம் தேதி) நாளை லட்ச தீப விழா வரை சுவாமி வேணுவனநாதர், (மேட்டுலிங்கம்) மூலஸ்தானத்தில் ருத்திர ஜெபம் மற்றும் அபிஷேக ஆராதனைகளும், திருமூலமகாலிங்கம், காந்திமதி அம்மன் மூலவர் சன்னிதிகளிலும், ஊஞ்சல் மண்டபத்தில் சுவாமி, அம்பாள் உற்சவர்களுக்கும் தினமும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது.

கடந்த 19ம் தேதி மாலை நெல்லையப்பர் சன்னதி நாதமணி மண்டபத்தில் தங்க விளக்கு மற்றும் இரு வெள்ளி விளக்கு தீபம் ஏற்றப்பட்டது. இத்தீபங்களானது நாளை (24ம் தேதி) இரவு 7 மணி வரை தொடர்ந்து அணையா விளக்காக எரிந்து கொண்டிருக்கும். இதைத் தொடர்ந்து லட்ச தீப விழாவையொட்டி நாளை காலை 8 மணிக்கு 11 பால்குட ஊர்வலம் நடக்கிறது. பின்னர் 11 மணிக்கு அம்மன் சன்னதி ஊஞ்சல் மண்டபத்தில் பஞ்ச மூர்த்தி உற்சவர்களுக்கு 308 சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. இதையடுத்து, மாலை 6 மணிக்கு தங்க விளக்கில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பிரதான கொடி மரம் அருகில் நந்தி தீபம் ஏற்றப்படும். பேட்டை வணிக வசிய தர்ம பண்டு கமிட்டி சார்பில் சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, உள்வெளி பிரகாரங்கள், ஆறுமுகநயினார் சன்னதி உள், வெளி பிரகாரம் மற்றும் கோயில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றும் வைபவம் நடக்கிறது.

இந்த லட்ச தீபவிழாவில் தமிழகத்தில் முதன்முறையாக நெல்லையப்பர் கோயிலில் புதுமையான தீபங்கள் கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயிலில் லட்ச தீபவிழாவில் ஏற்றப்படும் புதுமையான தீபங்கள் தை அமாவாசை லட்ச தீபவிழாவில் புதிய பரிமானத் தொழில் நுட்பத்தில் அலங்கார தீப விளக்குகள் 12 அடி உயரம் கொண்ட சுழலக்கூடிய கூம்பு வடிவ விளக்கு சுவாமி சன்னதி அனுப்பு மண்டப முன்பாகவும், 18 அடி உயரம் கொண்ட மூன்று கோள வடிவ சுழலும் விளக்கு நால்வர் சன்னதியிலும், 8 அடி உயரம் கொண்ட ராட்டின வடிவில் அமைந்த சுழலும் விளக்கு வரிசை அம்மன் சன்னதியிலும் பக்தர்கள்

கண்களை கவரும் வகையில் அலங்கார தீப விளக்குகள் ஏற்படுகின்றன. இந்த புதுமையான அலங்கார விளக்குள் மற்றும் அலங்கார மின் விளக்குகள் நெல்லை ஆர்எம்கேவி ஜவுளி நிறுவனத்தினர் உபயமாக செய்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை நெல்லை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்ஜோதி, உதவி ஆணையாளர் சங்கர், செயல் அலுவலர் யக்ஞநாராயணன், அறநிலையத்துறை மேற்கு பிரிவு ஆய்வாளர் கண்ணன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.