நிலவின் மண்ணிலிருந்து மிஞ்சும் தாதுக்களில் இருந்து செங்கல் தயாரிக்க முடியுமா ? – ஈ.எஸ்.ஏ பரிசோதனை

அடுத்த, 30 ஆண்டுகளில் நிலாவில் மனிதர்களை குடியேற்ற சில நாடுகள் திட்டமிட்டுள்ளன. இதில் பெரிய சிக்கல், அங்கு செல்வோர், பூமியிலிருந்து ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் நிலாவில் ஆக்சிஜன் இல்லை. ஆனால், நிலவின் மண்ணில், 4,0-45 சதவீதம் ஆக்சைடு உண்டு. பல தாதுக்களுடன் கலந்திருக்கும் ஆக்சைடை பிரித்தெடுத்து சுவாசிக்கும் ஆக்சிஜனாக மாற்றினால், மனிதர்கள் அங்கே வெகுநாள் வசிக்க முடியும் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

அதற்கென, இப்போதே ஐரோப்பிய விண்வெளி முகமையான, ஈ.எஸ்.ஏ., நிலவின் மண்ணிலிருந்து ஆக்சிஜனை பிரிக்கும் சில தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. அமெரிக்கா அனுப்பிய அப்போலோ விண்கலன்கள், கிலோ கணக்கில் நிலாவிலிருந்து மண் எடுத்து வந்திருப்பதால், அதிலுள்ள அனைத்து தாதுக்களும் விஞ்ஞானிகளுக்கு அத்துபடி. எனவே, ஈ.எஸ்.ஏ அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள், நிலா மண்ணிலிருந்து ஆக்சிஜன் தயாரித்த பிறகு, மிஞ்சும் தாதுக்களை வைத்து, செங்கல் தயாரிக்க முடியுமா எனவும் பரிசோதித்து வருகின்றனர்.

இவற்றுக்கென குறைந்த எடையில், குட்டி இயந்திரங்களை உருவாக்கி, விண்வெளி செல்லும் வீரர்கள் உடன் எடுத்துச் சென்றால், நிலாவில் மனிதக் குடியேற்றம் வெற்றிகரமாகத் துவங்கிவிடும்.

 

Source : Dinamalar