ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸின் இலவச நீட் பயிற்சி நிறைவு விழா

கோவை,பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்களுக்கு மருத்துவ நுழைவுத்தேர்வு (நீட்) பயிற்சியினை இலவசமாக வைத்ய வித்யா எனும் பெயரில் வழங்கி வருகிறது கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம். 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் 105 மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் (2019-2020) பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கல்வி ஆண்டிற்கானப் பயிற்சி வகுப்புகளின் நிறைவு விழா இன்று ஜனவரி 19 ஞாயிற்றுக்கிழமை கோயம்புத்தூர் ராம்நகரில் உள்ள சபர்பன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மதியம் ஒரு மணி அளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எழுத்தாளர் பேச்சாளர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், அகரம் பவுண்டேசன் உதவியுடன் கல்வி கற்று புகழடைந்த காயத்ரி மற்றும் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி வரவேற்புரை நல்கினார். அவர் பேசும் போது இப்பயிற்சியின் நுழைவுத்தேர்வுக்கு 400 பேர் பங்கெடுத்துக் கொண்டனர். அதில் இருந்து 50 பேர் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள், 50 பேர் பதினொண்றாம் வகுப்பு மாணவர்கள் தேர்ந்தெடுத்து கடந்த ஜூன் 2019 முதல் ஒவ்வொரு ஞாயிறுற்றுக்கிழமைகளிலும் நான்கு மணி நேரம் பயிற்சியினை வழங்கினோம். மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் வழங்கப்பட்டன. திறன் வாய்ந்த ஆசிரியர்களால் பயிற்சிகள் வழங்கப்பட்டன. தேர்வுகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கங்கா மருத்துவமனை மருத்துவர் கண்ணன், மற்றும் ஜெம் மருத்துவமனை மருத்துவர் பார்த்தசாரதியும் மாணவர்களிடையே ஊக்கத்தை ஏற்படுத்தும் விதமாக கலந்துரையாடலும் நிகழ்த்தினார்கள். வாட்ஸப் குழு ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களின் சந்தேகங்களுக்கும் எந்தநேரத்திலும் விளக்கம் கொடுக்கப்பட்டன. மாணவர்களும் முழு ஆர்வத்துடன் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுத்துக் கொண்டனர் என்று பேசினார்.

நிகழ்வில் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம்.கிருஷ்ணன் பேசுகையில், திறமை இருந்தும் விரல் பிடித்து அழைத்துக் கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலையில் சமூகத்தில் பலர் உள்ளனர். அது போல் மருத்துவராகும் கனவில் இருக்கும் பல மாணவர்களுக்கு தேவையான பயிற்சியினை பொருளாதார சுழ்நிலை காரணமாக எடுத்துக் கொள்ள முடியாமல் உள்ளனர். அவர்களுக்கு உதவி செய்யலாம் எனும் முயற்சியிலேயே இந்தப் பயிற்சி வகுப்பினை துவங்கினோம். கடல் ஆமைகள் முட்டையிட கரைக்கு வந்து மண் தோண்டி முட்டையிட்டு விட்டு திரும்ப கடலுக்குச் சென்று விடும். முட்டையில் இருந்து வெளிவந்த சிறிய ஆமைகள் கடலைத்தேடி விரைவாகச் செல்லும். காரணம், கடலை சென்றடைவதற்குள் அந்த ஆமைகள் பறவைகளுக்கு இரையாகும் ஆபத்துகள் உள்ளது. அதனைக் கடந்து அது கடலை அடையும். அதிசயம் என்னவென்றால் பிறந்தவுடனே கடலை சென்றடைய வேண்டும் எனும் புத்தி அவற்றுக்கு இருக்கிறது. பிறந்தவுடனேயே வாழ்வதற்கான போராட்டம் துவங்கிவிடுகிறது. கடல் ஆமைப் போலவே மாணவர்களும், இது வரை பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் காப்பாற்றி வந்துள்ளார்கள். யாரும் தான் வெற்றியடைய வேண்டும் என்று நினைத்தால் தான் வெற்றி பெற முடியும். இனி வரும் சில வருடங்கள் மாணவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளே உங்களுடைய, மற்றும் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை தீர்மாணிக்கும் என்று பேசினார்.

நிகழ்வில் பேசிய காயத்ரி, கூலி வேலை செய்யும் பெற்றோருக்கு பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து மேற்படிப்பு படிக்க முடியாமல் இருந்த பொழுது அகரம் அறக்கட்டளை தான் கல்லூரிப் படிப்பை தொடர உதவியது. வாழ்க்கையில் நமக்கு மட்டும் தான் இவ்வளவு கஷ்டமான்னு எல்லோருக்கும் தோணும் ஆனா வெளியில் பார்த்தா நம்மளப் போல பலபேர் கஷ்டப்பட்டுட்டு தான் இருப்பாங்க. நமக்கு ஆசிரியர்கள், அகரம் அறக்கட்டளை, ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் போன்ற நல் உள்ளங்கள் கை நீட்டி மேலே தூக்கிவிடும் பொழுது பயன்படுத்திக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும். இந்த தலைமுறையினர் அதிகமாக பயன்படுத்தும் வார்த்தை ஸ்டிரெஸ், இது போன்ற வார்தைகளை முதலில் தூக்கி எறிந்துவிட்டு நேரத்தினை பயன்படுத்தி முன்னேறிச் செல்ல வேண்டும் என்று பேசினார்.

எழுத்தாளர், பேச்சாளர் ஜெயந்தி ஶ்ரீ பாலகிருஷ்ணன் பேசுகையில், இந்தத் தலைமுறையினர் எந்த ஒரு விஷயத்துக்கும் சலித்துக் கொள்ளும், புலம்பும் மக்களாக உருவாகிக் கொண்டிருக்கிறோம். புலம்பிக் கொண்டே இருப்பதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை. இன்றைய மாணவர்கள் ஆசைக்கும் கனவுக்கும் மிக வேறுபாடு உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஆசைக்கு அஸ்திவாரம், செயல்திட்டங்கள் கிடையாது. நிலத்தில் ஆழ ஊன்றி அஸ்திவாரம் போடுவது போல் தான் கனவு. பாரதி, கனவு மெய்ப்பட வேண்டும் என்றார். அப்துல் கலாம் கனவு காணுங்கள் என்றார். கனவு வெற்றியை நோக்கி நம்மை இட்டுச் செல்லும்படியாகவே இயற்கை அமைந்துள்ளது. நீட் என்பது ஒரு நுழைவுத்தேர்வு மட்டுமே. மருத்துவத்துறையில் விடா முயற்சியும், தொடர் உழைப்பும் அவசியம் என்று பேசினார்.

இந்நிகழ்வில் சிறுதுளி உறுப்பினர் சந்திரசேகரன், பி.பி.ஶ்ரீனிவாசன், எழுத்தாளர் செல்வேந்திரன், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.