பக்தியின்றி கடவுள் அருள் இல்லை

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸின் ‘எப்போ வருவாரோ’ தொடர் சொற்பொழிவு நிகழ்வின் ஒன்பதாம் நாளன்று  சொற்பொழிவாளர் சுந்தரம் ‘அருணகிரிநாதர்’ குறித்து சொற்பொழிவாற்றினார்.

இவர் பேசுகையில், முருகா என்று மனமார கூறி படியேறி வேலவனை தரிசித்தால் நமது வாழ்க்கையில் முன்னேறிச் செல்லலாம். அருணகிரிநாதர் கந்தர் அலங்காரம், கந்தர் அனுகூதி, திருப்புகழ், வேல் விருத்தம், மயில் விருத்தம் என பல பாடல்களைப் பாடியுள்ளார்.பெற்றோர்கள் இல்லாததால் திருவண்ணாமலையில் தன் அக்காவின் வளர்ப்பில் வளர்ந்தார் அருணகிரிநாதர். செல்லமான வளர்ப்பினால் எல்லா வழிகளிலும் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி கெட்டுச் சீரழிந்து நோயாளியானார். மனம் வருந்தினார், வேதனைப்பட்டார். சாக முடிவெடுத்துப் போனார் வழியில் ஒரு பெரியவர் முருகா என்று சொல்லப்பா ஒரு நொடியில் உன் குறை தீரும் என்று சொன்னார். மறுத்து திருவண்ணாமலை கோபுரத்தில் இருந்து குதிக்கப் போனவர் ஒரு முறை யோசித்து முருகா என்று சொல்லி குதித்தார். முருகன் நேரில் தோன்றி அவரைக் காத்து அருள்பாலித்தார்.

அவரை அருணகிரி என்று அழைத்தவரும் முருகனே. வேலினால் அவர் நாவில் எழுதினார் முருகன், திருப்புகழ் பாடினார் அருணகிரிநாதர். தமிழ் இலக்கியத்தில் அதிக தாளத்தட்டோடு அமைந்த நூல் திருப்புகழ் தான். முருகன் நினைத்துக் கூப்பிட்டாலும், நினைக்காமல் முருகா என்று அழைத்தாலும் வந்து காப்பான். அருணகிரிநாதர் கொங்குமண்டலத்தில் மிக முக்கியமான திருச்செங்கோடு மற்றும் பழனி முருகனைக் குறித்து பாடியுள்ளார். திருச்செங்கோடு செங்கோட்டு வேலன் குறித்து பாடியதுதான் கந்தர் அனுகூதி. பழனியில் இருப்பது போல் திருச்செங்கோட்டிலும் முருகனுக்கு நவபாஷான சிலை, ஆகவே அபிஷேகம் கிடையாது. திருச்செங்கோட்டினை நாகமலை, நாககிரி எனவும் குறிப்பிடுகிறார். கந்தர் அலங்காரம் முருகனை நினைத்தும், முருகன் கூறிய உபதேசங்களை 108 பாடல்களாக கொடுத்துள்ளார் அருணகிரிநாதர். முருகனிடம், தான் இறந்த பிறகு உற்றார் உறவினர்கள் கூடி கண்ணீர் வடிக்காத, பிணமாக கிடக்கும் நிலையும் வேண்டாம் என்றே  வேண்டினார். அதையே அருணகிரிநாதருக்கு அருளினார் முருகன். பக்தியன்றி கடவுளின் அருள் கிடைக்காது என்று பேசினார்.