சிறந்த குடிமகனை உருவாக்குவது ஆசிரியரின் கடைமை

ஒருநாள் தேசிய கருத்தரங்கில் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி

 டாக்டர் என்.ஜி.பி.கல்வியியல் கல்லூரியில் “மாணவர்களிடையே ஆக்கப்பூர்வமான நுண்ணறிவை வளர்ப்பதற்கான புதுமையான கற்பித்தல் உத்திகள்” என்னும் தலைப்பில் ஒருநாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.  இதில் பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவர்களும், பேராசிரியர்களும் பங்கேற்றனர்.  முன்னதாக கல்லூரியின் முதல்வர் ராமசாமி வரவேற்புரை வழங்கி கருத்தரங்கத்தின் நோக்கத்தினைத் தமது உரையில் குறிப்பிட்டார்.

இதில் கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையின் தலைவரும் கல்லூரியின் தாளாளருமான டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி தலைமையுரையாற்றினார்.  இவர் பேசுகையில், “மாணவர்களைச் சிறந்த குடிமக்களாக உருவாக்குவதே ஆசிரியர்களின் கடமை. ஆசிரியர்கள் ஒழுக்கம் தவறாது நடக்கவேண்டும். கல்வியறிவோடு நல்ஒழுக்கங்களையும் வளர்க்க ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்கவேண்டும்” என குறிப்பிட்டார். கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் செயலர் டாக்டர் தவமணிதேவி பழனிசாமி வாழ்த்துரை தெரிவிக்கையில், “ஆசிரியர்கள் மாணவர்களின் தேவை அறிந்து கற்பிக்க வேண்டும். புதுப்புது உத்திகளைக் கையாண்டு மாணவர்கள் ஆர்வத்துடன் கற்க ஊக்கமளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு வாழ்த்தினார். டாக்டர் என்.ஜி.பி.கல்வி நிறுவனங்களின் இயக்குநர் (கல்வி), முத்துசாமி தமது வாழ்த்துரையில், காலத்திற்கேற்ப மாணவர்களைத் தயார்படுத்த புதிய கற்பித்தல் முறைகளைக் கையாள வேண்டியது அவசியம் என்று கூறினார்.

கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தின் கல்வி தொழில்நுட்பவியல் துறையின் இணைப் பேராசிரியர் தங்கராஜாத்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொடக்கவிழா சிறப்புரையாற்றினார்.   இவர் பேசுகையில், “மாணவர்களிடம் படைப்பாற்றல் சார்ந்த திறன்களை வளர்க்க வேண்டும்.  மாணவர்களின் இயல்புக்கு ஏற்ப கற்பித்தல் உத்திகளைப் பயன்படுத்த வேண்டும். மாணவர்களின் உளவியல் தன்மைகளையும், தேவைகளையும் அறிந்து அதன் அடிப்படையில் கற்பித்தல் உத்திகளைத் தேர்வு செய்யவேண்டும்” என்று குறிப்பிட்டார்.

இக்கருத்தரங்கில் டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் ராஜேந்திரன், கேரளா மத்தியப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையின் உதவிப் பேராசிரியர் தியாகு, கோவை சி.எம்.எஸ் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் லியோனார்ட் அசோக், எஸ்.என்.ஆர். கல்வியியல் கல்லூரியின் முதல்வர் மேரி நோயா லீனா, மைக்கேல் ஜாப் நினைவு (மகளிர்) கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ரவி, காரைக்கால் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியின் முதல்வர்  சிவசங்கர் பெங்களுரு நியூ ஹாரிஜோன் கல்வியியல் கல்லூரியின் உதவிப்பேராசிரியர் ஸ்ரீனிவாசஆச்சார்லு, கோவை கஸ்தூரி கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ராதாகிருஷ்ணன் கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) இந்திராணி மற்றும் ஆர்.வி.எஸ் கல்வியியல் கல்லூரியின் உதவிப்பேராசிரியர் நளினிலதா ஆகியோர் பல்வேறு அமர்வுகளின் தலைவர்களாக இருந்து கருத்தரங்கத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வழங்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை மதிப்பிட்டனர்.

மாலையில் நடைபெற்ற கருத்தரங்கத்தின் நிறைவு நிகழ்ச்சியியல் கேரளா மத்தியப் பல்கலைக்கழகத்தின் கல்வியியல் துறையின் உதவிப் பேராசிரியர் தியாகு கலந்துகொண்டு நிறைவுரையாற்றி கருத்தரங்கில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.  அதுசமயம் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளை வழங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. டாக்டர் என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரியின் கணிதத்துறைப் பேராசிரியரும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமான சித்ரா கருத்தரங்க அறிக்கையினை வழங்கி நன்றியுரையாற்றினார்.