குற்ற சம்பவங்களை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

கோவை மாநகர சட்டம்ஒழுங்கு துணை கமிஷனர் பாலாஜி சரவணன்

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கு பணி தொடர்பான பன்முனை பயிற்சி முகாம் கோவை மாநகர காவல்துறை மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு சார்பில் ஆர்.எஸ். புரத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குனர் கவிதாசன் முன்னிலை வகித்தார். கோவை மாநகர நில அபகரிப்பு தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் வெங்கடேசன் வரவேற்றார். இம்முகாமை கோவை மாநகர சட்டம் – ஒழுங்கு துணை கமிஷனர் பாலாஜி சரவணன் தொடக்கிவைத்து பேசுகையில், பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவினர் போலீஸுக்கும், பொதுமக்களுக்கும், பாலமாக இருக்க வேண்டும். அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். போலிஸாருடன் ரோந்து பணி செல்லும் போது பொறுப்புடன் இருக்கவேண்டும். பொதுமக்களிடம் மரியாதை குறைவாக நடந்துகொள்ள கூடாது. நகை பறிப்பு, ஏமாற்றி பணபறிப்பது போன்ற சம்பவங்கள் விழிப்புணர்வு இல்லாததால் தான் நடக்கின்றன. எனவே, அது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல்துறை சார்பில் கொண்டுவரப்பட்டுள்ள காவலன் செயலி மிகவும் உபயோகமாக இருக்கிறது, இது குறித்தும் பொதுமக்களிடம் எடுத்து கூற வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குடிபோதையில் வருபவர்களின் வாகனகள் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளோம். எனவே, அமைதியான முறையில் பொதுமக்களுக்கு இடையூறில்லாமல் புத்தாண்டை கொண்டாடவேண்டும். இதனால், விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்றார்.

முகாமில் சிறப்பாக பணியாற்றிய பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவை சேர்ந்த 15 பேருக்கு விருது வழங்கப்பட்டது. மேலும், முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. முகாமில் டாக்டர் மோனி, டாக்டர் தினேஷ் பெரியசாமி, பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியாளர் விநாயகமூர்த்தி, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.